முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான மத்திய பிரதேச அமைச்சரவையில் 28 எம்.எல்.ஏ.க்கள் புதிய அமைச்சர்களாக இன்று பதவியேற்றனர். இவர்களுக்கு ஆளுநர் மங்குபாய் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் மாதம் 17-ம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இதில், 163 இடங்களில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைத்தது.
இதையடுத்து, மாநிலத்தின் புதிய முதல்வராக இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை (ஓ.பி.சி.) சோ்ந்த மோகன் யாதவை மத்தியப் பார்வையாளர் குழு தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து, முதல்வராக மோகன் யாதவும், துணை முதல்வா்களாக ஜெகதீஷ் தேவ்டா, ராஜேந்திர சுக்லா ஆகியோரும் பதவியேற்றனர்.
இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநில அமைச்சரவை டிசம்பர் 25-ம் தேதி விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை ராஜ்பவனுக்குச் சென்ற முதல்வர் மோகன் யாதவ், ஆளுநர் மங்குபாய் படேலை சந்தித்தார்.
இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மோகன் யாதவ், இன்று மாலை 3.30 மணியளவில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பார்கள். அவர்களுக்கு ஆளுநர் மங்குபாய் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்று தெரிவித்தார்.
அதன்படி, இன்று மாலை முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான அமைச்சரவையில் 28 எம்.எல்.ஏ.க்கள் பிரதுமான் சிங் தோமர், பிரகலாத் சிங் படேல், கைலாஷ் விஜய்வர்கியா, குவார் விஜய் ஷா, ராகேஷ் சிங், கரண் சிங் வர்மா, உதய் பிரதாப் சிங், விஸ்வாஸ் சாரங் உள்ளிட்ட 18 பேர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
மேலும், 10 பேர் இணை அமைச்சர்களாகப் பதவியேற்றனர். ஓ.பி.சி. பிரிவினருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், அப்பிரிவைச் சேர்ந்த 11 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.