இந்தப் போருக்கு அதிக விலையை நாங்கள் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால், எங்களுக்கு வேறு வழியில்லை. ஹமாஸ் தீவிரவாதிகளை முற்றிலுமாக அழிக்கும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார்.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த அக்டோபர் 7-ம் தேதி காலையில் திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி, அப்பாவி மக்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர்.
அதோடு, வெளிநாட்டினர் உட்பட இஸ்ரேலில் இருந்து 200-க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். ஹமாஸ் தீவிரவாதிகளின் இத்தாக்குதலில் இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்த நிலையில், 3,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, இஸ்ரேல் இராணுவம் பதிலடித் தாக்குதலை தொடங்கியது. இத்தாக்குதல் இன்றுவரை நீடித்து வருகிறது. இத்தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது. 20,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 40,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள்.
மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம், முக்கிய முகாம்கள், பதுங்குக் குழிகள், சுரங்கப் பாதைகள் என ஏராளமான தீவிரவாத இலக்குகளை இஸ்ரேல் இராணுவம் அழித்திருக்கிறது. சமீபத்தில்கூட 4 கி.மீ. நீளம் கொண்ட அதிநவீன வசதிகள் கொண்ட சுரங்கப் பாதையை இஸ்ரேல் இராணுவம் அழித்தது.
எனினும், இத்தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாகி வருவதால் போரை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. உட்பட உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, போரை நிறுத்த சம்மதிக்கவில்லை. போர் தொடரும் என்று பிடிவாதமாக இருக்கிறார்.
இந்த நிலையில், இஸ்ரேல் இராணுவம் நேற்று மிகப்பெரிய தாக்குதலை நடத்தி இருக்கிறது. தெய்ர் அல்-பலாஹ் பகுதியில் உள்ள மகாஜி அகதிகள் முகாம் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.
அதோடு, இத்தாக்குதலில் குறைந்தபட்சம் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, மேற்குக் கரையில் உள்ள கிறிஸ்தவர்களின் புனிதத் தலமான பெத்தலகேம் மாநகரம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இன்றி களையிழந்து காணப்படுகிறது.
இதனிடையே, இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்திற்கு கத்தாரும், எகிப்தும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த சூழலில்தான், இந்தப் போருக்கு அதிக விலையை நாங்கள் கொடுக்க வேண்டி இருக்கிறது. ஆனாலும் எங்களுக்கு வேறு வழியில்லை. போரை நடத்தித்தான் ஆக வேண்டும். எனவே, ஹமாஸ் தீவிரவாதிகளை முற்றிலுமாக அழிக்கும் வரை போர் தொடரும்” என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார்.