நியூஸ் கிளிக் நிறுவனத்தின் மனிதவளத் தலைவர் அமித் சக்கரவர்த்தி அப்ரூவராக மாற விரும்புவதாகவும், 164-ன் கீழ் அறிக்கை அளிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
டெல்லி, மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு நியூஸ் கிளிக் ஆன்லைன் செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சீனப் பிரச்சாரத்தை ஊக்குவிப்பதற்காகவும், இந்தியாவின் இறையாண்மையை சீர்குலைக்கும் வகையில் செய்தி வெளியிடுவதற்கும் சீனாவின் ஆதரவாளரான அமெரிக்கவைச் சேர்ந்த பில்லியனர் நெவில் ராய் சிங்கமிடம் இருந்து பணம் பெற்றதாகவும், தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
இதையடுத்து, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை நியூஸ் கிளக் நிறுவனத்தின் மீதான நடவடிக்கைகளைத் தொடங்கின. மேலும், இது தொடர்பாக டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்து, நியூஸ் கிளிக் ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா, மனித வள மேம்பாட்டு அதிகாரி அமித் சக்கரவர்த்தி ஆகியோரை கடந்த அக்டோபர் மாதம் கைது செய்தது.
மேலும், இருவர் மீதும் தீவிரவாத எதிர்ப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டமான உபாவில் வழக்குப் பதிந்தது. இதன் பிறகு, டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு நியூஸ் கிளிக் ஆன்லைன் போர்ட்டலின் அலுவலகம், அதனுடன் தொடர்புடைய பத்திரிகையாளர்கள் சம்பந்தப்பட்ட இடங்களிலும் சோதனை நடத்தியது. டெல்லி, நொய்டா, குருகிராம், மும்பை மற்றும் காஜியாபாத் என குறைந்தது 35 இடங்களில் இச்சோதனை நடந்தது.
இதில் பத்திரிகையாளர்கள், பகுதி நேர பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், கார்ட்டூனிஸ்ட்கள் என 46 பேரிடம் டெல்லி போலீஸார் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தியது. தொடர்ந்து, அவர்களின் மடிக்கணினிகள் மற்றும் மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.
இதனிடையே, இவ்வழக்கு கடந்த 19-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணையை முடிக்க கூடுதலாக 3 மாதம் அவகாசம் கோரி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் போலீஸார் விண்ணப்பம் செய்தனர். இதை விசாரித்த நீதிபதி ஹர்தீப் கௌர், டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவுக்கு மேலும் 2 மாதங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது.
இந்த நிலையில்தான், நியூஸ்கிளிக் போர்ட்டலின் மனிதவளத் தலைவர் அமித் சக்ரவர்த்தி, இந்த வழக்கில் அப்ரூவராக மாற விரும்புவதாகவும், 164-ன் கீழ் அறிக்கை அளிக்கத் தயாராக இருப்பதாகவும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். அதேசமயம், இந்த விவகாரத்தில் பிரபீர் புர்காயஸ்தா உள்ளிட்டோரின் நீதிமன்றக் காவலை நீதிமன்றம் ஜனவரி 2024 வரை நீட்டித்திருக்கிறது.