துபாயிலிருந்து 303 இந்தியப் பயணிகளுடன் நிகராகுவா சென்று கொண்டிருந்த விமானம் பிரான்ஸில் விசாரணைக்காக தடுத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், 276 இந்தியர்களுடன் இன்று காலை மும்பை வந்தடைந்தது.
துபாயிலிருந்து 303 இந்தியப் பயணிகளுடன், மத்திய அமெரிக்காவில் உள்ள நிகராகுவ நாட்டிற்கு ஏர்பஸ் ஏ340 பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமானம் நிகராகுவ நாட்டின் தலைநகர் மனகுவாவிற்கு சென்று கொண்டிருந்தது.
பிரான்ஸ் எல்லைப்பகுதியில் பறந்தபோது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் தரையிறக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. விமானம் தரையிறக்க அனுமதி கிடைத்ததும், கிழக்கு பிரான்சில் உள்ள வாட்ரி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் வந்த பயணிகளிடம் பிரான்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விமானத்தில் மனித கடத்தல் நடந்திருக்கலாம் என்று பிரான்ஸ் அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர்.
இதனால் பிரான்ஸ் அதிகாரிகள் உடனடியாக விமானத்தை மீண்டும் பறக்க விடாமல் தடுத்து, இருவரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து பிரான்ஸ் அதிகாரிகள் இந்திய தூதரகத்திற்குத் தகவல் கொடுத்தனர். இந்தியத் தூதரக அதிகாரிகள் அங்கு சென்று இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளை செய்தனர்.
இது தொடா்பாக பயணிகளிடம் பிரான்ஸ் நீதிபதிகள் விசாரணை மேற்கொள்ளத் தொடங்கினா். நீதிபதிகளின் விசாரணைக்கு மொழிபெயா்ப்பாளா்கள் உதவினர். பயணிகளில் சிலா் இந்தியிலும், தமிழிலும் பேசினா். பயணிகள் தங்கள் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினர்.
இந்த விசாரணையில் விமானத்தில் பயணித்த அனைவரும் உரிய அனுமதியுடன் பயணித்ததும், மனித கடத்தலில் ஈடுபடவில்லை என்பதும் தெரியவந்தது. விமானம் மீண்டும் புறப்பட அனுமதி வழங்கி ஞாயிற்றுகிழமை பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், விமானத்தில் பயணித்த பயணிகளில் 25 பேர் பிரான்ஸில் அடைக்கலம் கோரி விண்ணப்பித்துள்ளனர். மேலும், இருவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இதையடுத்து, 276 பயணிகளுடன் விமானம் நிக்ராகுவா நாட்டிற்கு புறப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரான்ஸ் நாட்டில் தரையிறக்கப்பட்ட விமானம் நிக்ராகுவா நாட்டிற்கு செல்லாது என்றும், விமானம் இந்தியாவுக்கு செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 276 இந்தியர்களுடன் பிரான்ஸின் வட்ரே விமான நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்ட விமானம் இன்று அதிகாலை 4 மணியளவில் இந்தியா வந்தடைந்தது. மும்பை வந்த பயணிகளுடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.