இந்தியாவின் மேற்கு அரபிக்கடல் எல்லைப் பகுதியில், வணிகக் கப்பல்கள் மீது நடந்த தாக்குதலின் எதிரொலியாக, இந்திய கடற்படை 3 போர்க் கப்பல்களை அரபிக்கடலில் நிலை நிறுத்தி இருக்கிறது.
சௌதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு கர்நாடக மாநிலம் மங்களூருவுக்கு எம்.வி. கெம் புளூட்டோ என்கிற வணிகக் கப்பல் வந்துகொண்டிருந்தது. கடந்த 23-ம் தேதி, இந்தியாவின் மேற்குக் கடற்கரை பகுதியில் வந்து கொண்டிருந்த இக்கப்பல் மீது, ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதுகுறித்து இந்திய கடற்படைக்கு தகவல் கிடைக்கவே, இந்திய போர்க் கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் விரைந்து சென்றன. இதனிடையே, தாக்குதலில் பற்றிய தீ உடனடியாக அணைக்கப்பட்டது. எனினும், கப்பலில் இருந்த பணியாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதையடுத்து, போர்க் கப்பல் பாதுகாப்புடன், கச்சா எண்ணெய் கப்பல் மும்பை துறைமுகத்தை வந்தடைந்தது. அங்கு, எம்.வி. கெம் புளூட்டோ கப்பலில் இந்திய கடற்படையின் வெடிகுண்டு அழிப்பு குழு விரிவான ஆய்வு நடத்தியது. தொடர்ந்து, கப்பலில் இருந்து சரக்குகள் மற்றொரு கப்பலுக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், அரபிக்கடல் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வரும்நிலையில், கண்காணிப்புக்காக P-8I நீண்ட தூர ரோந்து விமானம், ஐ.என்.எஸ். மோர்முகாவ், ஐ.என்.எஸ். கொச்சி மற்றும் ஐ.என்.எஸ். கொல்கத்தா ஆகிய 3 போர்க் கப்பல்களை அரபிக் கடலில் பாதுகாப்புக்காக நிலை நிறுத்தி இருக்கிறது.
இதுகுறித்து கப்பற்படை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “தாக்குல் சம்பவங்கள் ஏற்படுத்தி இருக்கும் கவலை காரணமாக, வழிகாட்டுதல்களுக்காக ஐ.என்.எஸ். மோர்முகாவ், ஐ.என்.எஸ். கொச்சி மற்றும் ஐ.என்.எஸ். கொல்கத்தா ஆகிய 3 போர்க் கப்பல்கள் அரபிக் கடல் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன” என்று தெரிவித்தார்.