வாழ்க்கையில் ஒரு நொடியைக் கூட நாம் வீணடிக்கக் கூடாது. குருக்கள் நமக்கு இந்த போதனைகளை அளித்திருக்கிறார்கள். நாட்டின் பெருமைக்காகவும், புகழுக்காகவும் நாம் வாழ வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடந்த ‘வீர் பால் திவாஸ்’ (சீக்கிய குழு குரு கோவிந்த் சிங்கின் தியாகத்தை நினைவு கூறும் நாள்) தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கட்கா (சீக்கிய தற்காப்புக் கலை) நிகழ்ச்சியை நடத்தினர்.
இந்நிகழ்ச்சியைக் கண்டுகளித்த பிரதமர் மோடி, தொடர்ந்து, இளைஞர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “இந்தியா தனது சொந்த மக்கள், ஆற்றல், உத்வேகங்கள் மீது நம்பிக்கைக் கொண்டுள்ளது.
நமது பாரம்பரியத்தின் மீது பெருமை கொள்ளும் போது உலகம் நம்மை வித்தியாசமாக பார்க்கிறது. வாழ்க்கையில் ஒரு நொடியைக்கூட நாம் வீணடிக்கக் கூடாது. குருக்கள் நமக்கு இந்த போதனைகளை அளித்திருக்கிறார்கள். நாட்டின் பெருமைக்காகவும், புகழுக்காகவும் நாம் வாழ வேண்டும்.
இந்த ஆண்டு அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கிரீஸ் ஆகிய நாடுகளில் ‘வீர் பால் திவாஸ்’ நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு முதல் முறையாக டிசம்பர் 26-ம் தேதி வீர் பால் திவாஸ் கொண்டாடப்பட்டது” என்றார்.
அதேபோல, வீர் பால் திவாஸ் விழாவையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் கொல்கத்தாவில் உள்ள குருத்வாரா பாரா சீக்கிய சங்கத்தில் பிரார்த்தனை செய்தனர்.