மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் மனைவியும், மறைந்த முன்னாள் முதல்வருமான ஜானகியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட அ.தி.மு.க. பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்கும் விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பலரது புருவத்தையும் உயர்த்தச் செய்திருக்கிறது.
அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10.35 மணிக்கு, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், சிறப்புத் தீர்மானமாக மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின். மனைவியும், மறைந்த முன்னாள் முதல்வருமான ஜானகியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இதுகுறித்த தீர்மானத்தில், “கழகத்தின் நிறுவனத் தலைவர் ‘பொன்மனச் செம்மல்’ இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் துணைவியாரும், முன்னாள் முதலமைச்சருமான மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திருமதி வி.என்.ஜானகி அம்மையார் அவர்களுடைய நூற்றாண்டு விழாவை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிறப்பான முறையில் எழுச்சியோடு கொண்டாடுவது என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரம்தான் அரசியல் வட்டாரத்தில் பலரது புருவத்தையும் உயர்த்தச் செய்திருக்கிறது. அதாவது, அ.தி.மு.க.வினரைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர். பிறந்த நாள், நினைவு நாள் மற்றும் ஜெயலலிதா பிறந்த நாள், நினைவு நாள் ஆகியவற்றைத்தான் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.
அப்படி இருக்க, தற்போது புதிதாக எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதுதான் ஏன் என்பது புரியாமல் பலரது புருவத்தையும் உயர்த்தச் செய்திருக்கிறது.