ஐஎன்எஸ் இம்பால் போர்க் கப்பல் இந்தியக் கடற்படைக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பேசிய இந்தியக் கடற்படை தலைவர் அட்மிரல் ஆர் ஹரி குமார் ஒரு நகரத்தின் பெயரை ஒரு பெரிய போர்க்கப்பலுக்கு நாங்கள் பெயரிடுவது இதுவே முதல் முறை என்று கூறினார்.
சமீப காலமாகச் சீனாவின் உளவு கப்பல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடும் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன. எனவே இதற்கு முடிவுகட்ட இந்தியா தனது கடற்படையின் பலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டி வருகிறது.
இதன் வெளிப்பாடாக ஐஎன்எஸ் இம்பால் என்னும் போர்க் கப்பலை இந்தியக் கடற்படையில் இன்று இணைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்தியக் கடற்படை தலைவர் அட்மிரல் ஆர் ஹரி குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய கடற்படை தலைவர் அட்மிரல் ஆர் ஹரி குமார் இக்கப்பலின் பெயர்க் காரணத்தைக் கூறினார். இதுகுறித்து அவர், ” இம்பால் என்ற பெயர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பாரதத்தின் வடகிழக்கில் உள்ள ஒரு நகரத்தின் பெயரை ஒரு பெரிய போர்க்கப்பலுக்கு நாங்கள் பெயரிடுவது இதுவே முதல் முறை. ஆங்கிலேயர்கள் காலத்தில், விடுதலைக்காகப் போராடிய மணிப்பூர் மக்களின் தியாகங்களை நினைவுகூரும் வகையில் இம்பால் எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது ” என்று கூறினார்.
மேலும் அவர், ” இந்த இம்பால் போர்க்கப்பல் பன்முக கலாச்சாரம், பன்முக நம்பிக்கை, பன்முகத்தன்மை மற்றும் அனைத்து வகையான ஒற்றுமை உணர்வுகளின் அதே நெறிமுறைகளைப் பிரதிபலிக்கிறது. ” ஏக் பாரத் ஷேஷ் பாரத்” என்பதே இதன் கருப்பொருளாகும் ” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கடற்கொள்ளையர்கள் மற்றும் ட்ரோன் தாக்குதல் முயற்சிகளைத் தடுக்க நான்கு தடுப்பு கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. P-8I விமானம், டோர்னியர் (Dorniers), சீ கார்டியன் (Sea Guardians_, ஹெலிகாப்டர்கள் மற்றும் கடலோர காவல்படை கப்பல்கள், இவை அனைத்தும் கடற்கொள்ளை மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளக் கூட்டாகச் சேவை செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.