உத்தரப்பிரதேச மாநிலம் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய புலி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். வனத்துறையினர் விரைந்து சென்று புலியைக் கூண்டு வைத்துப் பிடித்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித் வனப்பகுதியில் புலிகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. சில நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறி, அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் புலிகள் உலா வருகின்றன.
குறிப்பாக களிநகர் பகுதியில் குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதிகளில் புலிகள் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்து வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் அட்கோனா கிராமத்திற்குள் இரவு நேரத்தில் விவசாயி ஒருவரின் வீட்டிலிருந்து புலி வெளியே வருவதைக் கண்ட அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் புலி அங்கிருந்த இரு வீடுகளுக்கு இடையே இருந்த சுவற்றின் மீது ஏறிப் படுத்துக்கொண்டது.
புலி நிற்பதை அறிந்தும் அதைக் காண ஏராளமான மக்கள் அங்குத் திரண்டனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. இதையடுத்து புலியைப் பிடிப்பதற்காக வனத்துறையினர் அக்கிராமத்திற்கு விரைந்தனர். பின்னர் வனத்துறையினர் கூண்டில் புலி சிக்கியது.