டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடித்துள்ளது.
டெல்லியின் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் சாலையில் இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ளது. இன்று மாலை இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடித்துள்ளது.
இதனை அறிந்த டெல்லி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையை மேற்கொண்டு உள்ளனர்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், “இது மாலை 5 மணியளவில் நடந்தது. நான் எனது பணியில் இருந்தபோது, டயர் வெடிப்பது போன்ற பலத்த சத்தம் கேட்டது.” “நான் வெளியே வந்தபோது, ஒரு மரத்தின் உச்சியில் இருந்து புகை வருவதைக் கண்டேன். அதைத்தான் நான் பார்த்தேன்,” என்று காவல்துறையிடம் தெரிவித்தார்.
இது தொடர்பாக இஸ்ரேலிய தூதரக செய்தித் தொடர்பாளர், மாலை 5:20 மணியளவில் தூதரகத்திற்கு அருகாமையில் குண்டுவெடிப்பு ஏற்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து எந்த ஊழியர்களும் காயமடையவில்லை என்று இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த வெடிப்புக்கான காரணத்தை விசாரிக்க இஸ்ரேலிய அதிகாரிகளுடன், இந்திய அதிகாரிகளும் சேர்ந்து, விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், இதுவரை வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை, ஆனால் தேடுதல் பணி இன்னும் தொடர்கிறது என்று டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
இருப்பினும், இஸ்ரேலிய தூதரக வளாகத்திற்குப் பின்னால் உள்ள “வெடிப்பு” தளத்தின் அருகே இஸ்ரேலிய தூதருக்கு முகவரியிடப்பட்ட கடிதங்களை கண்டுபிடித்தனர் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
புதுடெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே வெடிகுண்டு வெடிப்பது இது முதல் முறை அல்ல. 2021 இல், இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே குறைந்த தீவிரம் கொண்ட குண்டுவெடிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.