வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்களை இன்னும் கண்டுபிடிக்கவில்லை, மேலும் தமிழகப் பள்ளிகளில் இன்றும் ஜாதிய வன்கொடுமை நிலவுகிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை நன்னிலம் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
தமிழ் செம்மொழி என்று தமிழர்கள் உலக அரங்கில் பெருமிதத்துடன் வலம் வரக் காரணமான, பல ஆயிரம் ஆண்டு கால நினைவுகளின் தொகுப்பான சங்க இலக்கியத்தைத் தொகுக்க தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் வாழ்ந்த மண்.
தமிழகத்தின் மொத்த உள் மாநில உற்பத்தியில் திருவாரூர் மாவட்டத்தின் பங்கு வெறும் 0.86% மட்டுமே. அரியலூர், பெரம்பலூர், தேனி, விழுப்புரத்துக்கு அடுத்ததாக, கீழிருந்து 5 ஆவது இடத்தில், 34 ஆவது இடத்தில் இருக்கிறது. ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக இருந்த கருணாநிதி தனது சொந்த மாவட்டத்தையே முன்னேற்றாமல் திராவிட மாடல் என்று ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இந்திய அளவில் பின் தங்கிய மாவட்டங்களை முன்னேற்றுவதற்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். நாகப்பட்டினம் பாராளுமன்றத் தொகுதியையும் பாரதப் பிரதமர் மோடி அவர்களால் மட்டும்தான் முன்னேற்ற முடியும்.
திருவாரூர் மாவட்டத்தில், 58,051 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 2,11,363 வீடுகளில் குழாயில் குடிநீர், 1,20,830 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,00,213 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 1,08,016 பேருக்கு 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம், 58,143 விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் வருடம் ரூ.6000 என இதுவரை 30,000 ரூபாய், முத்ரா கடன் உதவி 3398 கோடி ரூபாய் என, மத்திய அரசு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நன்னிலம் மக்களுக்கு திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான பேரளத்தில் புதிய பேருந்து நிலையம், நன்னிலத்தில் தொழிற்பயிற்சி நிலையம், வலங்கைமானில் புதிய அரசு பாலிடெக்னிக் கல்லூரி என ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை. ஆனால், 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாகப் பொய் சொல்கிறார் முதலமைச்சர். தென் தமிழகத்தில் வெள்ளம் வந்து, ஐந்து நாட்களுக்குப் பிறகே, முதலமைச்சர் அங்கு செல்கிறார். பொதுமக்கள் குறித்த திமுகவின் அக்கறை அவ்வளவுதான்.
போலி சமூக நீதி பேசும் திமுக, வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்களை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. தமிழகப் பள்ளிகளில் இன்றும் ஜாதிய வன்கொடுமை நிலவுகிறது. ஆனால், திமுக நாடகமாடிக் கொண்டிருக்கிறது. ஊழல் வழக்கில் இரண்டு திமுக அமைச்சர் ஒருவர் சிறையில் இருக்கிறார்.
அவரை இன்னும் பதவி நீக்கம் செய்யாமல் இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருக்கிறார். இன்னொரு அமைச்சர் அடுத்த மாதம் சிறை செல்வார். 11 அமைச்சர்கள் ஊழல் விசாரணையை எதிர்கொண்டு இருக்கிறார்கள்.
இவை எல்லாம் யார் பணம்? ஏழை எளிய மக்களின் வரிப்பணம். ஆனால், பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது, ஒன்பதாண்டு காலத்தில் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை.
கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு காவிரி நீர் திறக்க மறுத்த போது, முதலமைச்சர் ஸ்டாலின், கர்நாடக அரசிடம் கேள்வி கேட்கவோ, கண்டிக்கவோ இல்லை. சொந்த அரசியல் நலனுக்காக, விவசாயிகள் நலனை அடகு வைத்திருக்கிறது திமுக.
ஆனால், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து, தமிழக உரிமையைக் காத்தவர் பிரதமர் மோடி அவர்கள். கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்த வரை, காவிரி தண்ணீர் தமிழகத்துக்கு தொடர்ந்து வந்தது. காங்கிரஸ் திமுக கூட்டணி, தமிழக விவசாயிகளுக்கு எதிராகத் தான் நடந்து கொள்கிறது.
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு ஏற்படவிருக்கும் அரசியல் மாற்றத்திற்கு முன்னோடியாக, வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில், இத்தனை ஆண்டுகளாக மக்களை வஞ்சித்து வந்த திமுக கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிக்க வேண்டும். பாரதப் பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்த, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.