அதிகார வர்க்கம், ஊழல்வாதிகள், இடைத்தரகர்களின் பிடியில் இருந்து விடுபட்டுள்ள நிலை தற்போது நிலவுவதாக குடியரசு துணை தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
அரியானா மாநிலம் ரோஹ்தக்கில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தின் 18வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் பங்கேற்று உரையாற்றினார்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது தற்போது அடிப்படை யதார்த்தம் என்று கூறினார். இதற்கு முன் அதிகார வர்க்கம்,ஊழல்வாதிகள், இடைத்தரகர்கள் ஆக்கிரமித்திருந்ததாகவும் , ஊழல் இல்லாமல் எதையும் செய்ய முடியாது என்ற நிலை நிலவியதாக தெரிவித்தார். ஆனால் தற்போது அவை அனைத்தும் சீர் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேர்மை, பொறுப்பு, வெளிப்படைத்தன்மை உள்ளிட்டவை பேரம் பேச முடியாத கூறுகள் என்று குறிப்பிட்ட தன்கர், தங்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்தவர்கள் திகைக்கும் அளவுக்கு, அவர்கள் சட்டத்தின் எல்லைக்குள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
உறுதியான கொள்கைகளும், நிர்வாகமும் இளைஞர்களின் திறமையை வெளிக்கொணரவும், அபிலாஷைகளை உணரவும், இந்தியாவின் வரலாற்றுப் பயணமான ‘பாரத்@2047’க்கு பங்களிக்கவும் உகந்த தளத்தை வழங்கியுள்ளதாக தன்கர் குறிப்பிட்டார்.