எக்ஸ்- போ சாட் விண்கலத்தை சுமந்து கொண்டு பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் ஜனவரி 1 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செப்டம்பர் 2 ஆம் தேதி சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்த்தி ஒன்றில், ஆதித்யா எல்-1 விண்கலம் வரும் ஜனவரி 6 ஆம் தேதி அதன் இலக்கான லாக்ராஞ்சியன் நிலைப்புள்ளியை சென்றடையும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது இஸ்ரோ ஒரு புதிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. பிளாக்ஹோல், நியூட்ரான் நட்சத்திரங்கள், செயலில் உள்ள விண்மீன் கருக்கள் குறித்து வானியல் எக்ஸ்ரே மூலங்களின் பல்வேறு இயக்கவியலை ஆய்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதற்காக எக்ஸ்-போ -சாட் எனப்படும் (XPoSat (X-ray Polarimeter Satellite) விண்கலத்தை, பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டை மூலம் விண்ணில் ஏவ ஏற்பாடுகள் நடைபெற்றுவருகிறது.
இந்த பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி காலை 9:10 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.