சென்னை எண்ணூரில் உள்ள தனியார் உரத் தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு திடீரென அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்டதால், பொதுமக்கள் கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகினர். வாயு கசிவு சரிசெய்யப்பட்டதாக தமிழக அரசு கூறியுள்ளது.
சென்னை எண்ணூர் அருகே உள்ள பெரியக்குப்பம் பகுதியில் தனியார் உரத் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலைக்குத் தேவையான இரசாயனங்கள் வெளிநாடுகளிலிருந்து கப்பல்கள் மூலம் இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்த தொழிற்சாலைக்கு நேற்றிரவு கப்பலில் அமோனியா வாயு கொண்டு வரப்பட்டது. கப்பல் நடுக்கடலில் நிறுத்தப்பட்டு, குழாய் மூலம் அமோனியம் வாயு ஆலைக்கு அனுப்பும் பணி நடைபெற்றது.
அப்போது எதிர்பாராத விதமாக குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அமோனியா வாயு கசிந்தது. இதன் காரணமாக, தொழிற்சாலைக்கு அருகே உள்ள பெரியக்குப்பம், சின்னக்குப்பம், நேதாஜி நகர் உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல், வாந்தி போன்ற உடல் நலப் பாதிப்புகள் ஏற்பட்டது. அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, பெரும்பாலான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர். பின்னர், வாயுக் கசிவு சரி செய்யப்பட்டது.
இந்நிலையில், தனியார் உர ஆலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வாயுக் கசிவு குறித்து ஆய்வு நடத்தப்பட்ட பின்னர், ஆய்வுக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.