இந்திய கிரிக்கெட் வீரரான ஷிகர் தவான் தன் மகனைப் பார்க்க ஏங்குவதாக வெளியிட்ட பதிவைக் கண்டு ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் வீரரான ஷிகர் தவான், தற்போது ஐ.பி.எல் உள்பட உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
இவர் 2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆயிஷா முகர்ஜியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆயிஷா முகர்ஜிக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், 2 குழந்தைகள் இருந்தன. அதைப்பற்றிப் பொருட்படுத்தாமல் ஷிகர் தவான் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2014 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.
இதனிடையே, கடந்த 2021 ஆம் ஆண்டு ஷிகர் தவானை அவருடைய மனைவி விவாகரத்து செய்துவிட்டு, மகன்களுடன் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுவிட்டார்.
இந்த நிலையில் ஷிகர் தவான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துப் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், “உன்னை நேரில் பார்த்து 1 ஆண்டை கடந்து விட்டது. சமூக வலைத்தளங்கள் மூலமாகத் தொடர்பு கொண்டும் 3 மாதங்கள் ஆகிவிட்டது. இதனால் கடந்த வருடம் பிறந்தநாளின்போது உன்னுடன் வீடியோ கால் மூலம் பேசிய பதிவுடன், என் மகனே உனக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.
உன்னை அதிகமாக அப்பா நேசிக்கின்றேன். கடவுள் கிருபையால் அடுத்த முறை உன்னை நேரில் சந்திக்கும் வரை நான் மனத்திடத்துடன் இருப்பேன். உன்னைக் குறித்துத் தெரிந்து கொள்ள ஆர்வமுடன் இருக்கிறேன். உன்னை மிக அதிகமாக நேசிக்கிறேன் ஜோரவர்” என பதிவிட்டுள்ளனர்.
இந்த பதிவு ரசிகர்களையும், இணையவாசிகளையும் கண்கலங்க வைத்துள்ளது. ஷிகர் தவானுக்கு ஆதரவாகக் கருத்துகளைப் பதிவிட்டு இந்த பதிவை வைரலாக்கி வருகிறார்கள்.