இந்தியாவில் நேற்று வரை 109 பேருக்கு ஜே.என்.1 வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு, பின் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அது உருமாறி கொண்டே இருப்பது உலக விஞ்ஞானிகளுக்கு சவாலாக அமைந்துள்ளது.
கொரோனாவில் இருந்து டெல்டா, பின்னர், ஒமிக்ரான் என கொரோனா வைரஸ் உருமாறி மக்களை அச்சுறுத்தி வந்தது. தற்போது, ஒமிக்ரான் பிஏ.2.86 வைரஸிலிருந்து திரிபு ஏற்பட்டு, ஜே.என். 1 எனும் புதிய வகை கொரோனா வைரஸ் உருவாகி உள்ளது.
உலகின் பல நாடுகளில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு ஜே.என்.1 என்ற உருமாறிய புதியவகை கொரோனா தொற்றும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் நேற்று வரை 109 பேருக்கு ஜே.என்.1 வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி அதிகபட்சமாக குஜராத்தில் 36 பேர் புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கர்நாடகாவில் 34 பேரும், கோவாவில் 14 பேரும், மகாராஷ்டிராவில் 9 பேரும், கேரளாவில் 6 பேரும், ராஜஸ்தான், தமிழகத்தில் தலா 4 பேரும், தெலுங்கானாவில் 2 பேரும் என மொத்தம் 109 பேருக்கு ஜே.என்.1 வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.