மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி உட்பட 11 வெவ்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ரிசா்வ் வங்கி தலைமையகம், எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி உட்பட 11 இடங்களுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்தது.
அந்த மின்னஞ்சலில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் உடனடியாக தங்களின் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காலக்கெடுவை நிர்ணயித்து இருந்தனர்.
மதியம் 1.30 மணிக்குள் ராஜினாமா செய்யாவிட்டால், 11 இடங்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகள் வெடித்து பேரழிவை ஏற்படுத்தும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டது.
அதில், குறிப்பிட்டுள்ள 11 இடங்களுக்கும், வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் மும்பை போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில், வெடிகுண்டுகளோ அல்லது சந்தேகத்திற்குரிய பொருட்களோ கிடைக்கவில்லை. இதை அடுத்து மிரட்டல் விடுத்த 11 இடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்னஞ்சல் விடுத்தது யார், அவர்களின் நோக்கம் என்ன, பின்னணியில் யார் உள்ளார்கள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.