தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
காலியாக உள்ள இந்த பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்துவது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த அக்டோபர் மாதம் 25 -ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது. மேலும், வட்டார வளமைய கருத்தாளர் பணியிடங்களும் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கான தேர்வு ஜனவரி 7-ம் தேதி அறிவிப்பட்டு இருந்தது. தேர்வு எழுத சுமார் 42,000 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இந்த நிலையில், அதீத கன மழை பாதிப்பு காரணமாக, ஜனவரி 7-ம் தேதி நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர் தேர்வு இரத்து செய்யப்பட்டது. அதற்கு மாறாக, வரும் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 -ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், ஜனவரி 7 -ம் தேதி அன்று நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் தேர்வு, அதீத கன மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டும், தேர்வர்கள் சிரமத்தை போக்கும் வகையிலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்வு வரும் 2024 பிப்ரவரி மாதம் 4-ம் தேதிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.