உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுவரும் இராமர் கோவில் வரைபடத்தை ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை வெளியிட்டிருக்கிறது.
அயோத்தியில் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. ஜனவரி மாதம் 22-ம் தேதி கோவில் மூலவர் பிரதிஷ்டை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், இராமர் கோவில் அமைந்திருக்கும் முழு வளாகத்தின் வரைபடத்தையும் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை வெளியிட்டிருக்கிறது. அயோத்தி அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய்தான் இந்த வரைபடத்தை வெளியிட்டிருக்கிறார்.
இந்த வரைபடம் மக்கள் வசதிக்காக வெளியிடப்படுவதாக அறக்கட்டளை தெரிவித்திருக்கிறது. மேற்கண்ட வரைபடத்தில், இராமர் கோவில் வளாகம் 70 ஏக்கர் பரப்பளவில் அமையவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில், 70 சதவிகிதம் பசுமையாகக் காணப்படுகிறது.
ஆகவே, பெரும்பகுதி தோட்டங்களாகவும், நந்தவனங்களாகவும் பராமரிக்கப்படும். மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கிழக்கு வாசல் வழியாக உள்ளே வந்து, மேற்கு வாசல் வழியாக வெளியேறலாம். அதோடு, கோவில் வளாகம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், தீயணைப்புப் பிரிவு, மின் தூக்கி உள்ளிட்டவற்றையும் உள்ளடக்கி இருக்கிறது.
கோவில் தளங்கள் ஒவ்வொன்றும் 20 அடி உயரத்துக்கு கட்டப்பட்டிருக்கின்றன. தவிர, கோவில் முழுவதும் 392 தூண்கள் அமைந்திருப்பதோடு, 44 வாயில்களைக் கொண்டிருக்கின்றன. கிழக்கு வாசலிலிருந்து 32 அடி எடுத்து வைத்தால் முக்கிய கோபுரத்தை அடையலாம்.
அதோடு, மாற்றுத் திறனாளிகளுக்காக வளாகத்தில் சாய்வுதளப் பாதையும், மின் தூக்கி வசதியும் செய்யப்பட்டிருக்கிறது. கோவிலின் 4 மூலைகளிலும் சூரியன், பகவதி துர்காதேவி, கணேசன், சிவன் தலங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
கோவிலின் பின்புறம் மருத்துவ வசதியுடன் கூடிய பக்தர்களுக்கான வளாகம், கழிவறை உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கின்றன. ஆகவே, அயோத்தி நகராட்சிக்கு கோயில் பெரும் சுமையாக இருக்காது என்று சம்பத் ராய் கூறியிருக்கிறார்.