திரிபுராவில் கோவாய்-ஹரினா சாலையில் 135 கி.மீ தூரத்தை மேம்படுத்தவும் அகலப்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, திரிபுரா மாநிலத்தில் மொத்தம் 134.913 கி.மீ நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலை 208-இன் கோவாய் முதல் ஹரினா வரையிலான சாலையை மேம்படுத்தவும் அகலப்படுத்தவும் ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டம் ரூ.2,486.78 கோடி முதலீட்டை உள்ளடக்கியது, இதில் ரூ.1,511.70 கோடி கடனாகும். அதிகாரபூர்வ மேம்பாட்டு உதவி திட்டத்தின் கீழ் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையிலிருந்து கடன் பெறப்படும்.
திரிபுராவின் பல்வேறு பகுதிகளுக்கு இடையே சிறந்த சாலை இணைப்பை எளிதாக்குவதற்கும், தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலை 8 தவிர திரிபுராவிலிருந்து அசாம் மற்றும் மேகாலயாவுக்கு மாற்று அணுகலை வழங்குவதற்கும் இந்தத் திட்டம் உதவும்.
வளர்ச்சி மற்றும் வருமானத்தின் அடிப்படையில் பின்தங்கியுள்ள மாநிலத்தின் விவசாயப் பகுதிகள், சுற்றுலாத் தலங்கள், மதத் தலங்கள் மற்றும் பழங்குடி மாவட்டங்களுக்கு மேம்பட்ட இணைப்பை இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி வழங்குகிறது.
திட்டப் பகுதிகளுக்கான கட்டுமானக் காலம் 2 ஆண்டுகள் ஆகும், இதில் கட்டுமானம் முடிந்த பிறகு, 5 முதல் 10 ஆண்டுக்காலத்திற்கு தேசிய நெடுஞ்சாலையின் பராமரிப்பில் இச்சாலை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.