இன்று உலகம் முழுவதும் சிவ ஆலயங்களில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக நடைபெற்றது.
சிதம்பரத்தில் இன்று நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தை காண உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் திருவாதிரை நாளில் சிவ ஆலயங்களில் ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் அருள்மிகு நடராஜர் திருக்கோவிலில் ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து, மனமுருக சுவாமி தரிசனம் செய்தனர்.
நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் என பஞ்சமூர்த்திகளும், தனித்தனி வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆருத்ரா தேரோட்டத்தையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்தில் குவிந்தனர்.
ஆருத்ரா விழாவையொட்டி, கடலூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.