உடல்நிலை பாதிப்பால் உயிரிழந்த விஜயகாந்தின் உடல் நாளை மாலை தேமுதிக அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். இன்று அதிகாலை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திரை உலகிலும், அரசியலிலும் சாதித்த விஜயகாந்த் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதனையடுத்து வெளிநாடுகளில் பல்வேறு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் கடந்த மாதம் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 20 நாட்களுக்கு மேல் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வந்தவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து வீடு திரும்பினார். இதனை தொடர்ந்து தேமுதிக பொதுக்குழு கூட்டத்திலும் கலந்து கொண்டார். அப்போது விஜயகாந்தின் உடல் நிலையை பார்த்து தொண்டர்கள் வேதனை அடைந்தனர்.
இந்தநிலையில் மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து நேற்று இரவு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நுரையீரலில் அதிகமான சளி காரணமாக மூச்சு விட சிரமம் ஏற்பட்டது.
இதனையடுத்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்ட நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். மேலும் திரைத்துறை பிரபலங்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு வந்து கொண்டு செல்லப்பட்டது.
இங்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் அஞ்சலி செய்வதற்காக வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாளை மாலை 4.35 மணி அளவில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அரசு மரியாதையோடு நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.