கேப்டன் விஜயகாந்த் ஆற்றிய பணிகள் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான டி.டி.வி.தினகரன் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், “திரையுலகம் மட்டுமல்லாது தமிழக அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி அடையாளத்தை பதித்த தே.மு.தி.க. தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.
சாமானியனாக சினிமாவுக்குள் நுழைந்து தன் புரட்சிகரமான கருத்துக்கள் மூலம் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்ததோடு, தமிழக அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்ந்த விஜயகாந்த் அவர்களின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே மிகப்பெரிய இழப்பாகும்.
இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கே எனும் முழக்கத்தை முன்னிறுத்தி நடிகராக, நடிகர் சங்கத் தலைவராக, அரசியல்வாதியாக, சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக, ஏழை, எளிய மக்களுக்கு உதவும் மனிதாபிமானம் கொண்டவராக கேப்டன் அவர்கள் ஆற்றிய பணிகள் என்றென்றும் தமிழக மக்கள் மனதில் நிலைத்திருக்கும்.
தமிழ் மீதும் தமிழக மக்கள் மீதும் அதீத பற்று கொண்டிருந்த கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், திரையுலகத்தினர், ரசிகர்கள் மற்றும் தே.மு.தி.க. தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.