மும்பைத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாதத் தலைவன் ஹபீஸ் சயீத், பாகிஸ்தான் அரசியலில் குதிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், ஹபீஸ் சயீதை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அரசு பாகிஸ்தான் அரசிடம் வலியுறுத்தி இருக்கிறது.
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி, இந்தியாவின் நிதி மையமாகவும், நுழைவு வாயிலாகவும் விளங்கும் மும்பைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள், மிகப்பெரிய தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட 164 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்த கொடூரத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவன் ஹபீஸ் சயீத். லஷ்கர் இ தொய்பா என்ற தீவிரவாத அமைப்பை நிறுவியவன் இவன்தான். இவனைப் பிடிக்க இந்தியா நீண்ட காலமாகப் போராடி வருகிறது. அதேபோல, அமெரிக்காவும் இவனது தலைக்கு 83 கோடி ரூபாய் நிர்ணயித்திருக்கிறது. ஆனால், ஹபீஸ் சயீத் தற்போது வரை பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறான்.
மும்பைத் தாக்குதலுக்குப் பிறகு, சர்வதேச நாடுகளின் நெருக்கடி காரணமாக, தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டியதாகக் கூறி, இவனை பாகிஸ்தான் அரசு கைது செய்தது. ஆனால், இப்படி அவன் அடிக்கடி கைது செய்யப்படுவதும், பின்னர் விடுவிக்கப்படுவதும் வழக்கமாகி விட்டது. எனவே, இவனை எப்படியாவது இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசு கடும் முயற்சி எடுத்து வருகிறது.
மேலும், ஹபீஸ் சயீதை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானிடம் இந்தியா அதிகாரப்பூர்வமாக கோரிக்கையும் விடுத்திருக்கிறது. இந்த சூழலில், அவனை நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பாகிஸ்தானிடம் வலியுறுத்தி இருக்கிறது.
ஆனால், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே இதுபோன்று குற்றவாளிகளை ஒப்படைக்கும் முறைகள் இல்லாததால் சயீத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் சிக்கல்கள் நிலவுகிறது. இதை ஹபீஸ் சயீத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சுதந்திரமாக நடமாடி வருகிறான்.
இதனிடையே, ஹபீஸ் சயீத்தின் மகன் தல்ஹா சயீத், பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலில் போட்டியிட இருக்கிறான். எனவே, ஹபீஸ் சயீத்தும் அரசியலில் களமிறங்கப் போவதாக செய்திகள் உலா வந்துகொண்டிருக்கின்றன.
ஒருவேளை இவன் அரசியல் களத்தில் குதித்து, தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்துவிட்டால், அவனை இந்தியாவுக்குக் கொண்டு வருவதில் பெரும் சிக்கல் ஏற்படும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியிருக்கிறார்கள். எனினும், ஹபீஸ் சயீத் விவகாரத்தில் பாகிஸ்தான் எந்தளவுக்கு ஒத்துழைக்கும் என்பது தெரியவில்லை.