மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக, கட்சி நிர்வாகிகளுடன் விவாதிப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தெலங்கானா சென்றிருக்கிறார்.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருக்கிறது. ஆகவே, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் தரப்பில் தேர்தல் முன்னேற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அந்த வகையில், பா.ஜ.க. தரப்பில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மத்திய அமைச்சர்கள்.
அந்த வகையில், கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. பலவீனமாக இருந்த மேற்குவங்கம், ஒடிஸா, தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கான பொறுப்பாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இதையடுத்து, தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் வியூகங்களை வகுப்பது தொடர்பாக, கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக அமித்ஷா இன்று சென்றிருக்கிறார்.
ஐதராபாத் ஷம்சாபாத் விமான நிலையத்துக்கு இன்று மாலை வந்தடைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, மத்திய அமைச்சரும், தெலங்கானா மாநில பொறுப்பாளருமான கிஷன் ரெட்டி வரவேற்றார். மேலும், அமித்ஷா வந்திறங்கிய புகைப்படங்களையும் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார்.
Received Hon'ble Union Minister for Home and Cooperation Shri @AmitShah Ji at Shamshabad Airport on his arrival.
Shri Amit Shah ji will address BJP Telangana state level meeting in Hyderabad.#AmitShahInTelangana pic.twitter.com/TGZ5PvU9XM
— G Kishan Reddy (@kishanreddybjp) December 28, 2023
தொடர்ந்து, ஷம்சாபாத் நகரில் நடைபெறும் அமைப்புக் கூட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்தும் அமித்ஷா, பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகளை தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். பின்னர், ஸ்லோகா மாநாட்டில் தெலங்கானா முழுவதும் உள்ள பா.ஜ.க. ‘மண்டல்’ தலைவர்களை சந்திக்கிறார். மேலும், ஐதராபாத்தில் உள்ள பாக்யலட்சுமி கோயிலிலும் அமித்ஷா பிரார்த்தனை செய்கிறார்.
2018-ம் ஆண்டு நடைபெற்ற தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் பா.ஜ.க. வெறும் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றது. அதேபோல, 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் தெலங்கானா மாநிலத்தில் மொத்தமுள்ள 17 தொகுதிகளில் 4 இடங்களை மட்டுமே பா.ஜ.க. கைப்பற்றியது.
அதேசமயம், நடந்து முடிந்த தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. 8 இடங்களை கைப்பற்றி இருக்கிறது. மேலும், வாக்கு சதவீதமும் உயர்ந்திருக்கிறது. ஆகவே, நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும். அதோடு, மொத்தமுள்ள 17 இடங்களில் 12 இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்று பா.ஜ.க. தீர்மானித்திருக்கிறது.