சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், தேமுதிக கட்சியினர், பொதுமக்கள் பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
ஒரு நல்ல நடிகராக திரை உலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்து மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்தவர், தேமுதிக என்ற கட்சியை நிறுவி அதை சிறப்பாக வழிநடத்தியவர், பிடித்தவர்களால் கேப்டன் என அன்பாக அழைக்கப்பட்டவர், என் அன்புச் சகோதரர் விஜயகாந்த் அவர்களின் மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையும், வருத்தமும் அடைந்தேன்.
விஜயகாந்த் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் தொடர்ந்து மருத்துவ சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பூரண நலம் பெற்றிடுவார் என நினைத்த வேளையில் சிகிச்சை பலனின்றி இன்று நம்மை விட்டு பிரிந்து விட்டார். கேப்டன் அவர்களுடன் பலமுறை சந்தித்து பேசி இருக்கிறேன்.
மிகுந்த உள்ளன்புடனும், வெளிப்படையாக பேசும் அவரது பாங்கும் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. அப்படிப்பட்ட நல்ல மனிதரை, நண்பரை இழந்துள்ளேன் என்றே சொல்ல வேண்டும்.
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், கட்சித் தொண்டர்களுக்கும், சினிமாத்துறை சார்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆன்மா நற்கதியடைய எல்லாம் வல்ல அன்னை சக்தியை பிரார்த்தித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
விதிவிலக்கான நடிகரும், செல்வாக்கு மிக்க அரசியல் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் காலமானதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.
திரையில் அவரது கவர்ச்சி மில்லியன் கணக்கானவர்களை கவர்ந்தது, அதே நேரத்தில் பொது சேவைக்கான அவரது அர்ப்பணிப்பு பலரின் இதயங்களை வென்றது. அவரது மரபு என்றென்றும் போற்றப்படும் மற்றும் அவர் இல்லாதது ஆழமாக உணரப்படும். இந்த இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர் மனிதநேய மிக்கவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இறப்பு செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன் அன்னாரது ஆத்மா இறைவனின் திருவடியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
அவரை இழந்து வாடும் அவர்களின் தொண்டர்களுக்கும் அவரது குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.