தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “உடல் நலக் குறைவுக்காக மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் இன்று காலை காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
தமிழ்த்திரையுலகிலும், அரசியலிலும் தமக்கென தவிர்க்க முடியாத இடத்தை வென்றெடுத்தவர் விஜயகாந்த். அரசியலைக் கடந்து அவர் மீது எனக்கு தனிப்பட்ட அன்பு உண்டு; அவருக்கும் என் மீது மரியாதை உண்டு. மிகுந்த இரக்க குணமும், மனிதநேயமும் கொண்டவர். திரைத் தொழிலாளர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என அனைவர் மீதும் எல்லையில்லாத அன்பும், அக்கறையும் காட்டியவர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு அவரது இயக்கத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.