மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் வைக்கப்பட்டிருக்கிறது. அவரது உடலுக்கு தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மதியம் 1 மணிக்கு இறுதி ஊர்வலம் நடைபெற்று, மாலை 4.45 மணிக்கு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.
உடல்நலக் குறைவு காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த், நேற்று காலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பின்னர், கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். ஆனால், தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் அதிக அளவில் கூடியதால், கோயம்பேடு பகுதியே ஸ்தம்பித்தது.
எனவே, விஜயகாந்த் உடலை தீவுத்திடலில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, இன்று காலை 6 மணியளவில் விஜயகாந்த் உடல் தே.மு.தி.க. தலைமையகத்தில் இருந்து தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும், ரசிகர்களும், தொண்டர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, மதியம் 1 மணியளவில் இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது. பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாகச் செல்லும் இறுதி ஊர்வலம், கோயம்பேட்டிலுள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தை சென்றடையும். தொடர்ந்து, மாலை 4.45 மணிக்கு அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.