பொதுமக்கள் அஞ்சலிக்காக விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், போக்குவரத்தை மாற்றம் செய்து சென்னை மாநகர போக்குவரத்துக் காவல்துறை அறிவித்திருக்கிறது.
நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலை உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் சாலிகிராமத்திலுள்ள அவரது இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமானோர் வருகை தந்தனர்.
எனவே, விஜயகாந்த் உடல் கோயம்பேட்டிலுள்ள தே.மு.தி.க. அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. எனினும், விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த அங்கும் கூட்டம் அலைமோதியது. இதனால், கோயம்பேட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. ஆனாலும், கூட்டம் கட்டுக்கடங்காமல் வரவே, கோயம்பேடு பகுதியே ஸ்தம்பித்தது.
இதையடுத்து, விஜயகாந்த் உடலை சென்னை தீவுத்திடலில் வைப்பதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியது. இதற்கான ஏற்பாடுகள் இரவு முழுவதும் நடந்த நிலையில், இன்று காலை விஜயகாந்த் உடல் தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள், திரையுலகினர், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
எனினும், தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த, அதிகாலையில் இருந்தே ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக, சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்து மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்திருக்கிறது.
அதன்படி, வாகனங்கள் காமராஜர் சாலையில் இருந்தும், மன்றோ சிலை மற்றும் சென்ட்ரல் வழியாகவும் தீவுத்திடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தீவுத்திடல் மைதானம், ஈ.வி.ஆர். சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை, கோயம்பேடு மேம்பாலம், கோயம்பேடு, வடபழனியில் இருந்து திருமங்கலம் வரையிலான 100 அடி சாலை ஆகிய முக்கிய பகுதிகளுக்குள் வணிக வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
அனைத்து வி.ஐ.பி. மற்றும் வி.வி.ஐ.பி. வாகனங்களும், காமராஜர் சாலை, நேப்பியர் பாலம், போர் நினைவுச் சின்னம், தீவுத்திடல் மைதானத்தின் இடதுபுற நுழைவு வழியாக அண்ணாசாலை செல்லும் சாலையில் அனுமதிக்கப்படும். பிற மூத்த கலைஞர்கள்,பல்லவன் முனை, வாலஜா முனை (அண்ணாசாலை, கொடிப்பணியாளர் சாலை சந்திப்பு) வரை அனுமதிக்கப்படுவார்கள்.
தீவுத்திடல் மைதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், போக்குவரத்து நெரிசலாக இருக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் மாற்று வழியை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவிர, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் கட்சி வாகனங்கள், கனரக வாகனங்கள் (போக்குவரத்து பேருந்துகள், மேக்சிகேப்கள்) அண்ணா சிலைக்கு அனுமதிக்கப்படும்.
மேலும் கட்சிக் குழுவினர் கடற்கரை சாலை வாகன நிறுத்துமிடத்திற்கு திருப்பி விடப்படுவார்கள். அனைத்து இலகுரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், தன்னார்வ வாகனங்கள் பெரியார் சிலை, சுவாமி சிவானந்தா சாலை, எம்.எல்.ஏ. விடுதி சாலை வழியாக அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.