அயோத்தி கோவிலில் நிறுவுவதற்காக குழந்தை ராமர் சிலையை தேர்வு செய்யும் வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது.
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழா அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. கோவிலின் கருவறைக்குள் நிறுவுவதற்காக 3 வெவ்வேறு இராமர் சிலைகள் சிற்பிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதில் சிறந்த ஒன்றை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் கூட்டத்தில் இன்று நடைபெறுகிறது.
இதனிடையே ஸ்ரீ ராம் மந்திர் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா ராம ஜென்மபூமி பாதை மற்றும் வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை மாவட்டத்தின் உயர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
இதனிடையே இராமர் கும்பாபிஷேக விழா தொடர்பான நிகழ்ச்சிகள் வெளியாகியுள்ளது. ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கி ஏழு நாட்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெறும். ஜனவரி 16 ஆம் தேதி, கோயில் அறக்கட்டளை நியமித்துள்ள புரவலர் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா பரிகார நிகழ்ச்சியை நடத்துவார்.சரயு நதிக்கரையில் ‘தஷ்வித்’ குளியல், விஷ்ணு வழிபாடு,பசுக்களுக்கு பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெறும்.
அதைத்தொடர்ந்து, ஜனவரி 17ஆம் தேதி,ராமர் சிலையை அவரது குழந்தை போன்ற வடிவில் (ராம் லல்லா) சுமந்த ஊர்வலம் அயோத்தியை அடையும். மங்கள கலசத்தில் சரயு ஜலத்தை சுமந்து வரும் பக்தர்கள் ராமஜென்மபூமி கோவிலை அடைவார்கள்.
ஜனவரி 18ஆம் தேதி கணேஷ் அம்பிகை பூஜை, வருண பூஜை, மாத்ரிகா பூஜை, பிராமண வரன் மற்றும் வாஸ்து பூஜையுடன் முறையான சடங்குகள் தொடங்கும்.
ஜனவரி 19ஆம் தேதி நவகிரகங்கள்’ மற்றும் ‘ஹவன்’ (நெருப்பைச் சுற்றியுள்ள புனித சடங்கு) நிறுவப்படும்.
ஜனவரி 20 ஆம் தேதி ராம ஜென்மபூமி கோவிலின் கருவறை சரயு நீரால் கழுவப்பட்டு, அதன் பிறகு வாஸ்து சாந்தி மற்றும் ‘அன்னாதிவாஸ்’ சடங்குகள் நடைபெறும்.
ஜனவரி 21 ஆம் தேதி, குழந்தை ராமர் சிலை 125 கலசங்களில் குளிப்பாட்டப்படும்.
ஜனவரி 22-ம் தேதி காலை பூஜைக்குப் பிறகு மதியம் ‘மிருகசிர நட்சத்திரத்தில்’குழந்தை ராமர் பிரதிஷ்டை செய்யப்படும்.