ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் ஆய்வகக் கட்டடங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா அடிக்கல் நாட்டினார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனையின் 2 தீவிர சிகிச்சை பிரிவுகள், மற்றும் பிஎஸ்எல்-3 ஆய்வகக் கட்டடங்களுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா அடிக்கல் நாட்டினார். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 7 ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்களையும் அவர் திறந்து வைத்தார்.
கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் மன்சுக் மாண்டவியா,
இந்தப் புதிய வசதிகள் ஆந்திராவின் சுகாதார உள்கட்டமைப்பிற்கு ஊக்கமளிக்கும் மற்றும் எந்தவொரு சுகாதார அவசரநிலை சவால்களையும் எதிர்கொள்ள உதவும் என்று தெரிவித்தார்.
இன்று அடிக்கல் நாட்டப்பட்ட மற்றும் தொடங்கி வைக்கப்பட்டுள்ள சுகாதார உள்கட்டமைப்புகள் ஆந்திர மக்களுக்குத் தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று கூறினார்.
ஆரோக்கியமான நாடு தான் வளர்ந்த நாடாக மாற முடியும் என்று தெரிவித்தார். மக்களுக்குத் தரமான சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவச் சேவைகளை வழங்குவது அரசின் பொறுப்பு என்றும், அதற்காக மத்திய அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
நாட்டில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், மருத்துவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய அதிக மருத்துவ கல்லூரிகளை உருவாக்குவதிலும் மத்திய அரசு கவனம் செலுத்துவதாக கூறினார்.
நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை தற்போது 23 ஆக அதிகரித்துள்ளதாகவும், நாட்டில் எம்பிபிஎஸ் மற்றும் செவிலியர் படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.