மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த் உடல், 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏதுவாக, கோயம்பேட்டிலுள்ள தே.மு.தி.க.வின் தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், அங்கு விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்துவதற்கு ஏராளமானோர் கூடினர். இதனால், கோயம்பேடு பகுதியே ஸ்தம்பித்தது.
இதையடுத்து, விஜயகாந்தின் உடலை தீவுத்திடலில் வைக்க தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, இன்று காலை விஜயகாந்த் உடல் தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, பிரபல சினிமா நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
அதேசமயம், விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கட்சித் தொண்டர்களும், ரசிகர் மன்றத்தினரும், பொதுமக்களும் சாரைசாரையாக அணிவகுத்து வந்தனர். இதனால், மதியம் 1 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த இறுதி ஊர்வலம், மதியம் 2.30 மணிக்குத்தான் புறப்பட்டது.
ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீர் மல்கக் கலந்துகொண்டனர். பின்னர், இறுதி ஊர்வலம் மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடியே மாலை 6.00 மணியளவில் கோயம்பேட்டிலுள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தை வந்தடைந்தது.
அங்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களும், முக்கியப் பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
தவிர, தமிழக அரசு சார்பில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியின், தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, 72 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதன் பிறகு, அனைவரும் விஜயகாந்துக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு கனத்த இதயத்தோடு புறப்பட்டுச் சென்றனர்.