அஸ்ஸாம் மிக முக்கியமான கிளர்ச்சிக் குழுவான உல்ஃபாவுடன் இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமை பிரித்து, போடோலாந்து தனி மாநிலம் அமைக்க வலியுறுத்தி, கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு தீவிரவாதக் குழுக்கள் போராட்டம் நடத்தி வந்தன. இக்குழுக்களுடன் மத்திய அரசு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இதையடுத்து, சில குழுக்கள் கடந்த 2012-ம் ஆண்டு முதல் சண்டை நிறுத்தத்தை அறிவித்தன. மேலும், இக்குழுவைச் சேர்ந்தவர்கள் முகாம்களில் தங்கி இருந்தனர். இதன் பிறகு, அஸ்ஸாம் மாநிலத்தின் 8 தீவிரவாத அமைப்புகளுடன் முத்தரப்பு அமைதி ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அதன்படி, ஆதிவாசி தேசிய விடுதலைப் படை, ஆதிவாசி கோப்ரா அஸ்ஸாம் அமைப்பு, பிர்சா கமாண்டோ படை, சந்தல் புலி படை, ஆதிவாசி மக்கள் இராணுவம் ஆகியவை உட்பட 8 தீவிரவாத அமைப்புகளின் பிரதிநிதிகள் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோர் முன்னிலையில் இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், அஸ்ஸாமில் செயல்படும் மிக முக்கியமான தீவிரவாத அமைப்பான, அஸ்ஸாம் ஐக்கிய விடுதலை முன்னணி எனப்படும், உல்ஃபா அமைப்பு பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை.
இதைத் தொடர்ந்து, அந்த அமைப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இந்த சூழலில், உல்ஃபா அமைப்புடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா ஆகியோர் முன்னிலையில் இன்று முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “உல்ஃபாவின் அனைத்து நியாயமான கோரிக்கைகளும் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்படுவதை மத்திய அரசு உறுதி செய்யும். மேலும், உல்ஃபா அமைப்பாக கலைக்கப்படும்” என்றார்.
இது தொடர்பாக அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “அஸ்ஸாமின் மிகப் பழமையான கிளர்ச்சிக் குழுவான உல்ஃபா வன்முறைப் பாதையை கைவிட ஒப்புக்கொண்டது. உல்ஃபா உடனான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.
மேலும், சமாதான நடவடிக்கையின் வெற்றியை உறுதிசெய்வதற்கு மத்திய அரசின் மீதான உல்ஃபாவின் நம்பிக்கை மதிக்கப்படும் என்று உல்ஃபா தலைமைக்கு நாங்கள் உறுதியளிக்க விரும்புகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
இது தவிர, வடகிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை கொண்டு வந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்தார்.
ULFA the oldest insurgent group of Assam agreed to abjure the path of violence. Speaking on the signing of a memorandum of settlement with ULFA.
https://t.co/6H1DIHmmHy— Amit Shah (@AmitShah) December 29, 2023