அயோத்தியின் உயர்ந்த பாரம்பரியத்தை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்திக்கு இன்று சென்றிருக்கும் பிரதமர் மோடி, சர்வதேச விமான நிலையத்தையும், மேம்படுத்தப்பட்ட அம்ரித் பாரத் இரயில் நிலையத்தையும் திறந்து வைக்கிறார். மேலும், சுமார் 16,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்புகள், தகவல் தொடர்பு வளர்ச்சி, கடவுள் இராமரின் நகரான அயோத்தியின் உயர்ந்த பாரம்பரியம் ஆகியவற்றை பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையம், புதுப்பிக்கப்பட்ட இரயில் நிலையம் ஆகியவற்றை திறந்து வைக்க இருக்கிறேன். அதோடு, பல்வேறு திட்டங்களை திறந்து வைப்பதுடன், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவிருக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.