2023-ல் இந்தியாவில் 177 புலிகள் உயிரிழந்துள்ளன. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 45 புலிகள் இறந்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 2023-ஆம் ஆண்டில் 202 புலிகள் இறந்ததாக சில ஊடக அறிக்கைகள் தவறான தகவலை வெளியிட்டதை அடுத்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உண்மையான தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் 177 புலிகள் உயிரிழந்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 45 புலிகளும், மத்தியப் பிரதேசத்தில் 40 புலிகளும், உத்தரகாண்டில் 20 புலிகளும், தமிழ்நாட்டில் 15 புலிகளும், கேரளாவில் 14 புலிகளும் உயிரிழந்துள்ளன. இவற்றில், 54 சதவீத புலிகள் காப்பகத்திற்கு வெளியே உயிரிழந்துள்ளன.
இப்போது, உலகில் உள்ள காட்டுப் புலிகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தியாவில்தான் உள்ளன. நாட்டில் குறைந்தபட்சம் 3 ஆயிரத்து 167 புலிகள் உள்ளன.
இந்தியாவில் காட்டுப் புலிகள் ஆண்டுக்கு 6 சதவிகிதம் ஆரோக்கியமான விகிதத்தில் வளர்ந்து வருகின்றன. இது பல்வேறு இயற்கை காரணங்களால், இறக்கும் புலிகளின் எண்ணிகையை சமன் செய்கிறது.