பிக் பாஷ் லீக் கிரிக்கெட் தொடரில் சிக்சர் போகாத பந்தை சிக்சர் என அம்பயர் அறிவித்தது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு போட்டியில் ஒரு பேட்ஸ்மேன் அடித்த பந்து மைதானத்தின் கூரையில் பட்டு பவுண்டரி எல்லைக்கு முன்பே கீழே விழுந்தது.
அப்போது தங்களுக்குள் விவாதம் செய்த கள அம்பயர்கள் அதை சிக்ஸ் என அறிவித்தார்கள். பிக் பாஷ் லீக் தொடரில் மாற்றப்பட்ட விதிகளால் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. இது உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறி இருக்கிறது. சிலர் இது ஏமாற்று வேலை என விமர்சனம் செய்து வருகின்றனர்.
Big Bash Leagueஎன்றால் என்ன ?
இந்தியாவின் ஐபிஎல் தொடருக்கு நிகராக ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் டி20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 2023 – 24 சீசன் தொடர் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது. அதில் 18வது போட்டியில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் – மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் விளையாடின.
நடந்தது என்ன ?
இந்தப் போட்டியில் அடிலெய்டு அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் மூன்றாம் வரிசையில் களமிறங்கிய கிறிஸ் லின் அதிரடி ஆட்டம் ஆடினார். போட்டி நடந்த மெல்போர்ன் டாக்லாண்ட்ஸ் அரங்கில் ஆடுகளத்தை மறைக்கும் வகையில் மேற்கூரை உள்ளது.
கிறிஸ்லின் உயரமாக அடித்த பந்து அந்த மேற்கூரையில் பட்டு பவுண்டரி எல்லைக்கு சில அடி தூரம் முன்பு கீழே விழுந்தது. பொதுவாக இப்படி பேட்ஸ்மேன் அடித்த பந்து ஏதேனும் பொருள் மீது பட்டு கீழே விழுந்தால் அந்த பந்தை “டெட் பால்” (Dead ball) என அறிவித்து மீண்டும் பந்துவீச்சாளரை பந்து வீச சொல்வார்கள்.
ஆனால், இந்த முறை களத்தில் இருந்த அம்பயர்கள் புரூஸ் ஆக்சன்ஃபோர்ட் மற்றும் ஜெரார்ட் அபூட் சில நிமிடங்கள் விவாதம் செய்து அதை சிக்ஸ் என அறிவித்தார்கள்.
Not a bad way to bring up a six 😉
Joe Clarke just hit the roof at Marvel Stadium!#BBL12 pic.twitter.com/TeDDzSkeiH
— Melbourne Stars (@StarsBBL) January 14, 2023
ஆஸ்திரேலியாவின் விதிமுறை :
எப்படி இது சாத்தியம்? பவுண்டரி கோட்டை தாண்டாத பந்து சிக்ஸா? என பல ரசிகர்கள் குழம்பினர். ஆனால், பிக் பாஷ் லீக் தொடரில் இந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் சில ஆடுகளங்கள் மழைக்கு நடுவே நிறுத்தாமல் போட்டிகளை நடத்தும் வகையில் மைதானங்கள் மேற்கூரையுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சில சமயம் பந்து உயரமாக செல்லும் போது அந்த கூரையில் படுவதால் மீண்டும் பந்து வீச வேண்டி உள்ளது. அதனால், சிக்ஸ் அடிக்கும் வாய்ப்பு பறிபோவதாக அதிருப்தி இருந்தது.
இந்த நிலையில், இனி மேற்கூரையில் பந்து பட்டு கீழே விழுந்தால் அது சிக்ஸரா அல்லது டெட் பாலா? என அம்பயரே முடிவு செய்து கொள்ளலாம் என விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரசிகர்கள் அதிருப்தி :
இது தவறான விதி என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஒருவேளை பந்து உயரே சென்றால் அதை கேட்ச் பிடிக்கக் கூட வாய்ப்பு உள்ளது. அப்படி என்றால் அம்பயர் பாதி தூரத்தில் பந்து கீழே விழுந்தால் அவராக இது கேட்ச் பிடிக்கப்பட்டு இருக்கும் என முடிவு செய்து அவுட் கொடுக்கலாமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.