திருநெல்வேலி மற்றும் தூதுக்குடி மாவட்டத்தில் அதீத கனமழை , வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு டிசம்பர் 30-ம் தேதி அன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 1,000 பேருக்கு நிவாரணம் வழங்கப்படும் என நடிகர் விஜய் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படியே, இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருநெல்விலி சென்றார் நடிகர் விஜய். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள கேடிசி நகரில் உள்ள மண்டபத்தில் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது, வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட 1,000 பேருக்கு நடிகர் விஜய் நிவாரண உதவிகளை வழங்கினார்.
மேலும், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் வெள்ளத்தால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிவாரணமாக தலா 1 லட்சம் ரூபாய் வழங்கினார்.
முன்னதாக, திருமண மண்டபத்தில், நிவாரண உதவி பெறுவர்கள் மட்டும் அமர வைக்கப்பட்டு இருந்தனர். ரசிகர்கள் மற்றும் பொது மக்களுக்கு மண்டபத்தில் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டு, அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில், பெருமழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய விஜய், ரசிகர் செல்போனில் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
நடிகர் விஜய் வருகையை அறிந்த அவரது ரசிகர்களும், பொது மக்களும், நிவாரணம் வழங்கும் மண்டபம் முன்பு குவிந்தனர்.
நிவாரண உதவிகள் வழங்கிய பின்னர் நடிகர் விஜய் மண்டபத்தை விட்டு காரில் புறப்பட்டார். அப்போது, அவரை காண கூட்டம் முண்டியடித்தது. இதில், இரண்டு பெண்கள் உள்பட சிலர் சிக்கிக் கொண்டு மயக்கமடைந்தனர். மேலும், 6 பேருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.