கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் லக்பீர் சிங் லண்டாவை மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரவாதியாக அறிவித்திருக்கிறது.
பாகிஸ்தான் எல்லையிலுள்ள பஞ்சாப் மாநிலம் டாரன் மாவட்டம் ஹரிகே கிராமத்தைச் சேர்ந்த நிரஞ்சன் சிங் மற்றும் பர்மிந்தர் கவுரின் ஆகியோரின் மகன் லக்பீர் சிங் லண்டா. கடந்த 1989-ம் ஆண்டு பிறந்த இவர், ஆயுதக் கடத்தல், போதைப் பொருள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.
மேலும், மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்கள், அதிநவீன ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் சப்ளை செய்வதிலும் ஈடுபட்டு வந்தார். தவிர, தீவிரவாத நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார். இது தொடர்பாக, லக்பீர் சிங் லண்டா மீது பஞ்சாப் மாநிலத்தில் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதையடுத்து, லண்டா கடந்த 2017-ம் ஆண்டு கனடாவில் குடியேறினார். 34 வயதாகும் இவர், தற்போது கனடா நாட்டின் ஆல்பர்ட்டா மாநிலத்தின் தலைநகரான எட்மண்டனில் வசிக்கிறார். இவர், சர்வதேச தீவிரவாத அமைப்பான பாபர் கல்சா என்ற காலிஸ்தான் அமைப்பில் உறுப்பினராகவும் இருக்கிறார்.
அதோடு, 2022-ம் ஆண்டு பஞ்சாப் காவல்துறையின் புலனாய்வுத் தலைமையகம் மற்றும் பஞ்சாப்பில் உள்ள சர்ஹாலி காவல் நிலையத்தின் மீதான ஆர்.பி.ஜி. தாக்குதல்கள் உட்பட பல்வேறு தீவிரவாத செயல்களில் மூளையாக செயல்பட்டிருக்கிறார். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது.
இந்த சூழலில், கடந்த ஜூலை மாதம் 27-ம் தேதி லக்பீர் சிங் லண்டாவை தேடப்படும் குற்றவாளியாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், லண்டாவின் சொந்த கிராமத்தில் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டது. அதன்படி, லண்டாவின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படன.
இந்த நிலையில்தான், தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் லக்பீர் சிங் லண்டாவை தீவிரவாதியாக அறிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது.