2023 -ம் ஆண்டுக்கு விடைகொடுத்து 2024-ம் ஆண்டை வரவேற்க பொது மக்கள் தயாராகி வருகின்றனர்.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் மற்ற நகரங்களைவிட களைகட்டும். அந்த வகையில், 2024ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க சென்னை பெருநகர காவல்துறை பாதுகாப்பு ஏற்படுகளை தீவிரப்படுத்தியுள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், சென்னை மாநகரம் முழுவதும் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் 100 முக்கிய கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டுதலங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டிச.31 -ம் தேதி இரவு 9 மணியிலிருந்து, தியாகராயநகர், அடையாறு, புனித தோமையர்மலை, பூக்கடை. வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணாநகர், மயிலாப்பூர், கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி, கொளத்தூர் மற்றும் கோயம்பேடு பகுதிகளில் மொத்தம் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன தணிக்கை செயல்படும்.
கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, GST ரோடு போன்ற பகுதிகளில் இருசக்கர வாகன பந்தயத்தை தடுக்கும் வகையில் 25 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.