இலங்கையில் தோட்டத் தொழில் உள்ளிட்ட முக்கிய உட்கட்டமைப்புகளை கட்டியெழுப்புவதில், இந்திய வம்சாவளி தமிழர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், நினைவு தபால் தலையை பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று வெளியிட்டார்.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் 1883-ம் ஆண்டு இலங்கையில் தேயிலை தோட்டத் தொழில் உட்பட பல்வேறு வேலைகளுக்காக தமிழகத்திலிருந்து ஏராளமான தமிழர்களை அழைத்துச் சென்றனர். இலங்கையில் முக்கிய உட்கட்டமைப்புகளை கட்டியெழுப்பியது இவர்கள்தான்.
இந்த நிலையில், இலங்கையில் இந்திய வம்சாவளி தமிழர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும், 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையிலும், பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, நினைவு தபால் தலையை இன்று வெளியிட்டார்.
இந்த தபால் தலையை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய ஜெ.பி.நட்டா, “இன்று நாம் 1883-ம் ஆண்டை நினைவு கூர்வதும், 200 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு சென்ற தமிழர்களின் இந்திய வம்சாவளியை நினைவு கூர்வதும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
பிரிட்டிஷார் இலங்கையில் பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்கிய பிறகு, தமிழர்களை அங்கு குடியேற ஊக்குவித்து, தங்கள் வயல்களில் வேலை செய்ய பணித்தனர். அந்த தமிழர்களின் போராட்டம் மிகவும் வேதனையானது. அந்த மக்கள் இலங்கைக்கு இடம்பெயர்வதால் ஏற்படும் அபாயங்களை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை” என்றார்.
மேலும், 2014-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து இலங்கைத் தமிழர்களுடன் ஈடுபாடு கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியையும் ஜெ.பி.நட்டா பாராட்டினார். 2017-ம் ஆண்டு யாழ்ப்பாணம் சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்கான பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பை எடுத்துரைத்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு 14,000 வீடுகள், சுகாதாரம், கல்வி, கலாசார வசதிகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகக் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பேசுகையில், “பொருளாதார நெருக்கடியின்போது இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் பிரதமர் மோடியின் முயற்சிகள் மற்றும் அண்டை நாடுகளின் கொள்கை மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு அவர் அளித்த ஆதரவுக்காக நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
நாங்கள் இலங்கைக்கு வந்தபோது, நாங்கள் 3-வது பெரிய இனம் என்று எங்களிடம் கூறப்பட்டது. ஆங்கிலேயர்கள் வெளியேறிய பிறகு, எங்களுக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆனால், அதன் பிறகு எங்கள் போராட்டம் தொடங்கி விட்டது. நாங்கள் நாடற்றவர்களாகி விட்டோம். இப்போது குடியுரிமை பெற்றிருந்தாலும், மற்றவர்களுக்கு இணையாக சமத்துவத்தை விரும்புகிறோம்” என்றார்.
நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டர்.