அயோத்தியில் 1,450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. இக்கோயில் நாட்டின் மிகப் பெரிய கலாச்சார மையமாகத் திகழும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆகவே, கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து அயோத்திக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அதற்கேற்ப வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்தது.
இதையடுத்து, அயோத்தியில் இருந்த சிறிய அளவிலான இரயில் நிலையம், 240 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதி நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டது. அதேபோல, 1,450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக விமான நிலையம் கட்டப்பட்டது.
இரயில் நிலையத்துக்கு அயோத்தி தாம் இரயில் நிலையம் என்றும், விமான நிலையத்துக்கு மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் என்றும் பெயர் சூட்டப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அயோத்திக்குப் புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்திலிருந்து நேராக இரயில் நிலையத்துக்குச் சென்ற பிரதமர் மோடி, அயோத்தி தாம் இரயில் நிலையத்தைத் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, மகரிஷி வால்மீகி விமான நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையம், ஆண்டுக்கு 10 லட்சம் பயணிகளை கையாளும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த விமான நிலைய முனையக் கட்டடத்தின் முகப்பு அயோத்தி இராமர் கோவில் கட்டடத்தை சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கட்டடத்தின் உட்புற சுவர் ஓவியங்கள், இராமரின் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் வரையப்பட்டுள்ளன.
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த விமான நிலையத்தில் மழைநீர் சேகரிப்பு, நீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சூரிய மின் உற்பத்தி நிலையம் போன்றவையும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.