நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக டிச.28-ம் தேதி காலை 6 மணி அளவில் காலமானார்.
அவரது மறைவையொட்டி, திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். வெளி நாடுகளில் ஷீட்டிங் உள்ளிட்டவைகளில் சிக்கிக் கொண்டவர்கள் வீடியோ வெளியிட்டு அதன் மூலம் இரங்கல் தெரிவித்தனர். திரைப்பட படபிடிப்புகள், சினிமா காட்சிகள் இரத்து செய்யப்பட்டன. மறைந்த விஜயகாந்த் உடல், தேமுதிக அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரேமலதா, பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, சாதி, மதம், இனம், மொழி, கட்சி என எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர் விஜயகாந்த். இது அவரது மறைவு மூலம் நாங்கள் தெரிந்து கொண்டோம்.
விஜயகாந்த் விருப்பம் போல் தேமுதிக அலுவலக வளாகத்தில் அவரை அடக்கம் செய்துள்ளோம். மேலும், விஜயகாந்த் நினைவாக, நினைவிடம் கட்டப்பட உள்ளது. அந்த நினைவிடத்திற்கு பொது மக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டும் என்றாலும் வரலாம்.
மேலும், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பொது இடத்தில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபமும், சிலையும் அமைக்க வேண்டும் என்றார்.
இதனிடையே, இன்று காலை, விஜயகாந்த் குடும்பத்தினர் அவரது நினைவிடத்தில் மீண்டும் சடங்குகள் செய்தனர். இதனைத் தொடர்ந்து, கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் வரிசையில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
விஜயகாந்த் மறைவுக்கு பிறகு பிரேமலதா முன் வைத்துள்ள இந்த கோரிக்கை குறித்து திமுக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை அறிய பலரும் ஆவலுடன் காத்துள்ளனர்.