உஜ்வாலா திட்டத்தின் 10-வது கோடி பயனாளியின் வீட்டில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தேநீர் அருந்திய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
கடந்த 2014-ம் ஆண்டு பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். இதன் பிறகு, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தத் தொடங்கினார். அந்த வகையில், கடந்த 2016-ம் ஆண்டு, வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் ஏழைப் பெண்களுக்கு இலவச சமையல் கேஸ் இணைப்பு வழங்கும் ‘உஜ்வாலா’ திட்டத்தைத் தொடங்கினார்.
இந்தத் திட்டத்தின் மூலம் இலவசமாக வழங்கப்படும் கேஸ் இணைப்புக்கான செலவை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு செலுத்தி விடும். இத்திட்டத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது. இந்த உஜ்வாலா திட்டத்தின் மொத்த பயனாளிகள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டி இருக்கிறது.
இந்த நிலையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிய விமான நிலையம், மேம்படுத்தப்பட்ட இரயில் நிலையம் ஆகியவற்றை திறந்து வைக்கவும், பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் இன்று வருகை தந்திருக்கிறார்.
அப்போது, உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனடைந்த 10-வது கோடி பயனாளி குறித்து பிரதமர் மோடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பயனாளியான மீரா என்ற பெண்மணி வீட்டுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவரது வீட்டில் தேநீர் அருந்திய பிரதமர் மோடி, அங்கிருந்த குழந்தைகளிடம் விளையாடினார்.
பின்னர், அக்குடும்பத்தினருடன் செல்பி எடுத்துக் கொண்ட பிரதமர் மோடி, வெளியே நின்றிருந்த மக்களுக்கு ஆட்டோகிராப் வழங்கினார். மேலும், அவர்களுடனும் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.