அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்காக உலகமே காத்துக் கொண்டிருக்கிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்து, 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேசுகையில், “இன்று உலகம் முழுவதும் ஜனவரி 22-ம் தேதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறது. காரணம், அன்றுதான் அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
உலகில் எந்த நாடாக இருந்தாலும், வளர்ச்சியில் புதிய உச்சத்தை எட்ட வேண்டும் என்றால், அது தனது பாரம்பரியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். வளர்ச்சியும், பாரம்பரியமும்தான் இந்தியாவை முன்னெடுத்து செல்லும். ராம் லல்லா கூடாரத்தில் இருந்தார். இன்று ராம் லல்லாவுக்கு மட்டுமல்ல, நாட்டின் 400 கோடி ஏழைகளுக்கும் வீடு கொடுக்கப்பட்டிருக்கிறது.
நாட்டின் வரலாற்றில் டிசம்பர் 30-ம் தேதி மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்கது. 1943-ம் ஆண்டு இதே நாளில்தான் அந்தமானில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தேசியக் கொடியை ஏற்றி இந்தியாவின் சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினார். இன்று 16,000 கோடி ரூபாய்க்கு மேல் வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு திறப்பு விழா நடத்தப்பட்டுள்ளது.
இந்த உட்கட்டமைப்பு தொடர்பான பணிகள் மீண்டும் நவீன அயோத்தியை நாட்டின் வரைபடத்தில் பெருமையுடன் நிறுவும். இன்றைய இந்தியா தனது புனித யாத்திரை தலங்களை அழகுபடுத்துவதுடன் டிஜிட்டல் தொழில்நுட்ப உலகிலும் மூழ்கியுள்ளது. அயோத்தியின் வளர்ச்சி இங்குள்ள மக்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள வந்தே பாரத், அம்ரித் பாரத் இரயில்கள் மூலம் இரயில்வேத் துறை வளர்ச்சி பெறும். அயோத்தியில் இராமர் கோவில் கட்டத் தொடங்கியதும், ஏராளமானோர் இந்நகரை நோக்கி வரத் தொடங்கினர். இதனை மனதில் கொண்டு, வளர்ச்சிப் பணிகளை தொடங்கினோம். இன்று அயோத்தி விமான நிலையம், இரயில் நிலையத்தை திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.
விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகி பெயர் சூட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது. கடவுள் இராமரின் பணிகளை, இராமாயணம் மூலம் நமக்கு அறிமுகப்படுத்தியவர் வால்மீகிதான். நாட்டிற்காக புதிய தீர்மானம் எடுத்து, புதிய ஆற்றலை நமக்குள் நிறைவேற்ற வேண்டும். இதற்காக 140 கோடி பேரும், தங்களது வீடுகளில் ஜனவரி 22-ம் தேதியன்று ராமஜோதி ஏற்றி அன்றைய தினம் தீபாவளி கொண்டாட வேண்டும்” என்றார்.