இந்தியாவில் 2023ஆம் ஆண்டில் தலைவர்கள் சிலர் பேசிய பேச்சுக்கள் சர்ச்சையாக மாறியதையும் அதற்கு கிளம்பிய எதிர்ப்பும் குறித்து விரிவாக பார்ப்போம்.
சனாதனம் குறித்த திமுக அமைச்சர் உதயநிதியின் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் கடந்த செப்.2-ம் தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டிருக்கிறார்கள். சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும்.
கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா ஆகியவற்றை எதிர்க்க முடியாது, ஒழிக்க வேண்டும். அந்த வகையில், சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும் என தெரிவித்தார்.
அமைச்சர் உதயநிதியின் இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. திமுக அங்கம் வகிக்கும் இண்டி கூட்டணியிலும் கடும் சலசலப்பு எழுந்தது. இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
சனாதன தர்மத்தை ஒழிக்க அழைப்பு விடுத்ததன் மூலம், பழங்கால பாரம்பரியத்தைப் பின்பற்றும் இந்தியாவின் 80% மக்கள் தொகையை ஒழிக்க உதயநிதி ஒப்புதல் அளித்தாக பாஜகவின் அமித் மாளவியா கூறினார்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலின் கிறிஸ்தவ மிஷனரிகளின் கருத்துக்களை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டியதுடன், தமிழகத்தின் ஆன்மீக பாரம்பரியம் குறித்த அவரது புரிதல் குறித்து கேள்வி எழுப்பினார்.
இதேபோல் நாடாளுமன்ற மக்களவையில் பேசிய திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார், இந்தி பேசும் மாநிலங்களில் பாஜக ஜெயிப்பதுதான் பலம். நாங்கள் இந்தி பேசும் மாநிலங்களை Gau Mutra (மாட்டு சிறுநீர் மாநிலங்கள்) என்றுதான் அழைப்போம் என கூறியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திமுக எம்பியின் சர்ச்சைக்குரிய கருத்து மக்களவையில் வடக்கு-தெற்கு பிரிவினை குறித்த விவாதத்தை ஏற்படுத்தியது.
திமுக எம்பி செந்தில்குமாரின் இந்தப் பேச்சுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்தனர். சமூக வலைதளங்களிலும் டாக்டர் செந்தில் குமார் பேச்சுக்கு கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.வட இந்தியர்களுக்கு எதிரான இழிவான கருத்துக்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நிலைப்பாடு குறித்து பாஜக கேள்வி எழுப்பியது. மேலும் டாக்டர் செந்தில்குமார் வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் பாஜக உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இதனையடுத்து தனது கருத்துக்கு செந்தில்குமார் மன்னிப்பு கேட்டார். தனது கருத்தை வாபஸ் பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.கவனக்குறைவாக வெளியிட்ட அறிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தி இருந்தால் அதை நாம் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். அந்த வார்த்தைகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
இதேபோல் பீகார் முதல்வரின் மக்கள் தொகை கட்டுப்படுத்துவது தொடர்பான பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சட்டப்பேரவையில் உரையாற்றினார்.
அப்போது “கணவனின் செயல்கள் அதிக பிறப்பு விகிதத்துக்கு வழிவகுக்கின்றன. கல்வியறிவு பெற்ற பெண் இதனை எப்படி கட்டுப்படுத்தலாம் என்பதை நன்கு அறிவாள். முன்பு 4.3 ஆக இருந்த பிறப்பு விகிதம் தற்போது 2.9 ஆக குறைந்துள்ளது. விரைவில் அது 2 ஆக குறையும் என்று கூறினார்.
நிதிஷ் குமாரின் பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹாத் பூனாவாலா (Shehzad Poonawalla) கூறுகையில், “சட்டப்பேரவைக்குள் நிதிஷ்குமார் பயன்படுத்திய வார்த்தை மிகவும் மோசமான, அநாகரீகமான, பெண் வெறுப்பு, பாலியல் மற்றும் ஆணாதிக்க சிந்தனை கொண்டது. இதுதான் பிஹார் முதல்வரின் மனநிலை. மாநில சட்டப்பேரவையில் இப்படி பேசப்பட்டால் பிஹார் பெண்களின் நிலை என்னவாகும்” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நிதிஷ் குமாரின் பேச்சு தரக்குறைவானதாக இருந்ததாக தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா ஷர்மா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், பிஹார் முதல்வரின் இழிவான அறிக்கை மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பெண் எம்எல்ஏக்களின் முன்னிலையில் அவர் பேசிய விதம் மூன்றாம் தர சினிமா வசனம் போல இருந்தாக குற்றம்சாட்டினார். இதனைத்தொடர்ந்து நிதிஷ் குமார் தமது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் திபெத்திய மதபோதகர் தலாய் லாமா, சிறுவன் ஒருவனிடம் தமது நாக்கை உறிஞ்சு என்று சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 87 வயது தலாய் லாமா, தர்மசாலாவில் தம்மைக் காண வந்த சிறுவனின் இதழில் முத்தம் கொடுத்தார். அதன்பின்னர் தமது நாக்கை உறிஞ்சும்படி அந்த சிறுவனிடம் அவர் கூறியதாக தெரிகிறது. அந்த சம்பவம் தொடர்பான காணொளி வேகமாக சமூக ஊடகங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து தலாய்லாமா வருத்தம் தெரிவித்தார்.
விளையாட்டாக அந்தக் கருத்தைக் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார். சர்ச்சையை ஏற்படுத்திய அந்த காணொளியைக் கண்ட பலரும் தலாய் லாமாவிற்கு எதிராகக் கருத்து பதிவிட்டனர்.