சமீபத்தில் இயற்றப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பான 12 விளக்கப் புத்தகங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார். இப்புத்தகங்கள் சட்டங்களில் செய்யப்பட்ட மாற்றங்களை சுருக்கமாகவும், எளிமையாகவும் தெளிவாகக் கொண்டு வந்திருப்பதாகக் கூறினார்.
இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு பதிலாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சக்ஷ்ய சன்ஹிதா என 3 புதிய மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த 3 மசோதாக்களும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. இதன் பிறகு, மேற்கண்ட மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இம்மசோதாக்களுக்கு கடந்த 25-ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து, 3 மசோதாக்களும் சட்டமாக்கப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில், புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பான 12 விளக்கப் புத்தகங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வெளியிட்டார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அமித்ஷா வெளியிட்டிருக்கும் பதிவில், “புதிதாக அறிவிக்கப்பட்ட குற்றவியல் சட்டங்கள் தொடர்பான குறிப்புப் புத்தகங்களை மிகக் குறுகிய காலத்தில் வெளியிட்டதற்காக மோகன் லா ஹவுஸை நான் வாழ்த்துகிறேன்.
அதேபோல, பதிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் வினய் அஹுஜாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். புத்தகங்களை உடனடியாக வெளியிட்டதற்காக நிர்வாக இயக்குநர் உதித் மாத்தூர் மற்றும் வெளியீட்டு நிறுவனமான லெக்சிஸ் நெக்சிஸின், விற்பனை இயக்குநர் ஸ்ரீமகேந்தர் சதுர்வேதி ஆகியோரையும் வாழ்த்துகிறேன்.
சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட 3 குற்றவியல் சட்டங்கள் பற்றிய குறிப்புப் புத்தகங்களை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த 3 சட்டப் புத்தகங்களும் மிகவும் எளிமையான முறையில் புதிய சட்டங்களில் செய்யப்பட்ட அனைத்து மாற்றங்களையும் எடுத்துரைத்துள்ளன.
மேலும், ஈஸ்டர்ன் புக் நிறுவனத்தின் இயக்குனர் சுரேந்திர மாலிக் மற்றும் மூத்த இணை ஆசிரியர் பூமிகா இந்துலியா ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈஸ்டர்ன் புக் நிறுவனம் வெளியிட்டுள்ள 3 புத்தகங்களும், புதிய சட்டங்களை பழைய சட்டங்களுடன் ஒப்பிட்டுப் பகுதி வாரியாகப் பயனுள்ள வகையில் வழங்கி இருக்கின்றன.
நியாயமான மற்றும் விரைவான நீதி வழங்கல் முறைக்கான அரசாங்கத்தின் பார்வையை புத்தகங்கள் எடுத்துக்காட்டுகின்றன. புதிதாக உருவாக்கப்பட்ட 3 தொலைநோக்கு குற்றவியல் நீதி அமைப்பு சட்டங்கள் தொடர்பான குறிப்புப் புத்தகங்களை வெளியிட்டதற்காக டாக்ஸ்மேன் பப்ளிகேஷன் தலைமை நிர்வாக அதிகாரி பியூஷ் குமாரை வாழ்த்துகிறேன்.
இந்த 3 புத்தகங்களும் சட்டங்களில் செய்யப்பட்ட மாற்றங்களை சுருக்கமாகவும், எளிமையாகவும் கொண்டு வந்துள்ளன. புத்தகங்கள் வழக்குச் சட்ட விளக்கங்களை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் வழங்குகின்றன. இன்று புத்தகங்களை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.