இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் பால் உற்பத்தி சுமார் 51% அதிகரித்திருப்பதாகவும், இது உலகின் அதிவேக வளர்ச்சியாகும் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து, ஆனந்த் மாவட்டத்தில் அமையவிருக்கும் இந்திய தேசிய கூட்டுறவு பால் பண்ணை கூட்டமைப்பு (என்.சி.டி.எஃப்.ஐ.) அலுவலக கட்டடத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, பால் உற்பத்தியாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் அமித்ஷா, “இன்று 24 சதவீத பங்களிப்புடன் உலக பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தை எட்டி இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் பால் உற்பத்தி சுமார் 51 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இது உலகில் மிக விரைவான அதிகரிப்பாகும்.
கூட்டுறவு பால் பண்ணைகள் மூலம் பெரும்பாலான உற்பத்திகள் செய்யப்பட்டதால்தான் இது சாத்தியமானது. ஆகவே, அனைத்து கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு பால் நிறுவனங்கள் மற்றும் கிராம அளவில் கால்நடை வளர்ப்பு விவசாயிகள் இடையே பரஸ்பர ஒத்துழைப்பை உறுதி செய்யும் கூட்டுறவு மாதிரியை கடைபிடிக்க பால்பண்ணைத் தலைவர்கள் முன்வர வேண்டும்.
கூட்டுறவு பால் பண்ணை நடத்த வேண்டும் என்றால், அதை வளர்க்க பல நிறுவனங்கள் உருவாக வேண்டும். அந்த வகையில், இந்திய தேசிய கூட்டுறவு பால் பண்ணை கூட்டமைப்பு இப்பணியைச் செய்யும். ஒரு வகையில், அனைத்து பால் பண்ணைகளுக்கும் வழிகாட்டும் பணியை என்.சி.டி.எஃப்.ஐ. செய்து வருகிறது.
வெண்மைப் புரட்சியானது ஆனந்த் மாவட்டத்தின் ‘வாசி’ என்ற கிராமத்தில் இருந்துதான் தொடங்கியது. தற்போது, அதே ஆனந்த் மாவட்டத்தில் சுமார் 7,000 சதுர மீட்டர் பரப்பளவில் என்.சி.டி.எஃப்.ஐ.-ன் தலைமையகம் கட்டப்பட உள்ளது. சுமார் 32 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என்.சி.டி.எஃப்.ஐ., சூரிய ஒளி மின் நிலையம் மூலம் இயக்கப்படும். மேலும், 100 சதவீதம் பசுமை கட்டடமாக இருக்கும்” என்றார்.
மேலும், தன்னம்பிக்கை இந்தியா என்ற பார்வையை அடைவதில் கூட்டுறவு பால் பண்ணைகளின் பங்களிப்பை பாராட்டிய அமித்ஷா, டிஜிட்டல் இந்தியாவை மேம்படுத்த 100 சதவீத டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அடைய பால்பண்ணைத் தலைவர்களை வலியுறுத்தினார். அதோடு, இயற்கை விவசாயம் குறித்தும் வலியுறுத்திய அமைச்சர், மாட்டுச் சாணத்தை சேகரிக்க கிராம அளவிலான மையங்களை அமைக்க கூட்டுறவு பால் கூட்டமைப்புகளை கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியின்போது, 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 37 வெற்றியாளர்களுக்கு என்.சி.டி.எஃப்.ஐ. இ-மார்க்கெட் விருதுகளையும் அமித்ஷா வழங்கினார். கர்நாடகாவைச் சேர்ந்த பால் கூட்டமைப்பு நந்தினி, டெல்லியில் உள்ள மதர் டெய்ரி மற்றும் தமிழகத்தின் ஆவின் டெய்ரி ஆகியவை விருதுகளின் முதல் 3 இடங்களைப் பிடித்தன. நிகழ்ச்சியில், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், சங்கர் சவுத்ரி, திலீப் சங்கனி உள்ளிட்ட முன்னணி கூட்டுறவுத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.