ஜிஎஸ்டி வரியில் நேரடியாக 50% மாநிலங்களுக்குக் கிடைக்கிறது, நிதி ஆணையம் மூலமாக, கூடுதல் 21% மாநிலங்களுக்குக் கிடைக்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை நாகப்பட்டினத்தில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
விஜயாலய சோழன் முதல் மூன்றாம் ராஜேந்திர சோழன் வரை ஏறக்குறைய 400 ஆண்டு காலம் உயர்புகழில் இருந்தது நாகை துறைமுகம். தென்கிழக்காசியாவை சோழர்கள் கடல் மார்க்கமாக வெல்வதற்கு மிக முக்கிய தளமாக செயல்பட்டது.
63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயன்மாரின் மண் இது. இங்குள்ள மீனவப் பெருங்குடி மக்களை, ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய கல்வெட்டுகளில் ‘சிவன் படவர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது, அவர்கள் சைவ நெறியின் பாரம்பரியத்தை உணர்த்துகிறது. புகழ்பெற்ற சிக்கல் சிங்காரவேலர் கோவில் அமைந்திருக்கும் தொகுதி. சூரபத்மனை அழிக்க அன்னை பராசக்தியிடம் இருந்து சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரபத்மனை சம்ஹாரம் செய்த வரலாற்றுக்குரிய மண்.
ஜிஎஸ்டி வரியில் நேரடியாக 50% மாநிலங்களுக்குக் கிடைக்கிறது. நிதி ஆணையம் மூலமாக, கூடுதல் 21% மாநிலங்களுக்குக் கிடைக்கிறது. ரூ.100 ஜிஎஸ்டி வரியில், ரூ. 71 மாநிலங்களுக்கே வழங்கப்படுகிறது. மீதமுள்ள 29% வரிப்பணம், மத்திய அரசு திட்டங்களுக்குப் பயன்படுகின்றன. அந்த நிதியில் இருந்து, தமிழகத்திற்கு நமது பாரத பிரதமர் வழங்கிய 11 மருத்துவ கல்லூரிகளில் ஒன்று நாகப்பட்டினத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 35,647 பேருக்கு பிரதமரின் வீடு, 24,748 வீடுகளில் குழாயில் குடிநீர், 91,043 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 42,372 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம் 64,223 பேருக்கு, 53,252 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய் என இதுவரை ரூ. 30,000, முத்ரா கடன் உதவி 3,879 கோடி என நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ள திட்டங்கள் ஏராளம்.
71% வரி வசூல் பெற்ற திமுக அரசு செய்த பணிகள் என்ன? நாகப்பட்டினம் தொகுதிக்கு திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான, குளிர்பதனக் கிடங்குகள், நாகூர் அரசு மருத்துவமனையில் வசதிகள் மேம்பாடு, உரத் தொழிற்சாலை, கடல் உணவு மண்டலம், திருமருகலில் தொழிற்பேட்டை, அக்கரைபேட்டை மீன் இறங்குதளம் விரிவாக்கம், நாகூர் முதல் கோடியக்கரை வரையிலான கடற்கரை கிராமங்கள் பாறை கற்கள் அமைத்தல், நாகப்பட்டினம் நகரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருமருகல் ஒன்றியத்தில் பருத்தி கொள்முதல் நிலையம் என ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஆனால், 99% வாக்குறுதிகள் நிறைவேற்றிவிட்டதாகப் பொய் சொல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். லஞ்சமும் ஊழலும் தவிர திமுக ஆட்சியில் வேறொன்றுமில்லை.
நாகப்பட்டினம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆளுர்ஷா நவாஸ் தொகுதியில் இருப்பதை விட, தொலைக்காட்சியில்தான் அதிக நாட்கள் இருக்கிறார். நாகப்பட்டினம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் செல்வராஜ் செய்த ஒரே சாதனை முதலமைச்சர் தலைமையில் தன் இல்லத் திருமண நிகழ்வை நடத்தியது மட்டும்தான். இதற்கா மக்கள் இவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்?
வரும் பாராளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் நலத் திட்டங்கள் தொடர, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, பாராளுமன்றம் அனுப்ப வேண்டும். மக்கள் விரோத திமுக கூட்டணியை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.