2023-ம் ஆண்டில், விளையாட்டுத் துறையில் இந்தியா வியத்தகு சாதனைகளைப் படைத்துள்ளது. பல்வேறு சர்வதேச போட்டிகளிலும், இந்திய வீரர் – வீராங்கனைகள், பாராட்டத்தக்க வகையில் விளையாடியுள்ளனர்.
1. சாதனை படைத்த விராட் :
35 வயதான கோலி 2023 உலகக் கோப்பையில் தனது 50 வது ஒருநாள் சதத்தை அடித்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்தார். அதோடு, ஒரே உலகக் கோப்பை தொடரில் 600 ரன்களுக்கு மேல் குவித்த மூன்றாவது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார்.
2. தோனியின் சிஎஸ்கே படை :
2023-ம் ஆண்டில் நடைபெற்ற சீசனில் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். சிஎஸ்கே அணிக்கு தேவையான வெற்றி ரன்களை விளாசி இருந்தார் ஜடேஜா. சென்னை சாம்பியன் பட்டம் வென்றதும் தோனி, ஜடேஜாவை அப்படியே தனது தோளில் சுமந்து கொண்டாடினார்.
3. தங்கம் வென்ற தங்கமகன் :
இந்தியாவின் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தற்போதைய ஒலிம்பியனாகவும், ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும், 26 வயதான அவர் நடப்பாண்டு தொடக்கத்தில் நடந்த உலக தடகள சாம்பியன் ஷிப்பில் (WAC) இந்தியாவின் முதல் பதக்கத்தையும் வென்றார். மேலும், கிஷோர் குமார் ஜெனா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்று பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.
4. சாதனைகளை முறியடித்த முகமது ஷமி :
முகமது ஷமி கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் நான்குமுறை ஐந்து விக்கெட்டுகளை பதிவு செய்தார். இது எந்த ஒரு பந்து வீச்சாளராலும் இதுவரை நிகழ்த்தப்படவில்லை. 2023 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற பெருமையுடன், இந்திய வீரர்களில் சிறந்த தனிநபர் பந்துவீச்சு என்ற பெருமையையும் பெற்றார்.
5. பேட்மிண்டன் இரட்டையர்கள் :
பேட்மிண்டன் இரட்டையர்களான சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக் ரங்கிரெட்டி ஆகியோர், சர்வதேச அரங்கில் அவர்களது அற்புதமான ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திறனுடன் ஒட்டுமொத்த விளையாட்டு சகோதரத்துவத்தையும் திகைக்க வைத்தனர். பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு (BWF) சார்பில் நடத்தப்பட்ட சுவிஸ் ஓபன், இந்தோனேசியா ஓபன் மற்றும் கொரியா ஓபனில் பட்டங்களை வென்று அசத்தினர்.
ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் தங்கத்தையும், ஏப்ரல் மாதம் ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கத்தையும் கொண்டு வந்த பெருமை இந்த ஜோடிக்கு உண்டு. அக்டோபரில், BWF தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த முதல் இந்திய பேட்மிண்டன் இரட்டையர் ஜோடி என்ற பெருமையைப் பெற்றனர்.
6. FIFA உலகக் கோப்பை தகுதிச்சுற்று :
இந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த பெனால்டி ஷூட் அவுட்டில் 5-4 என்ற கோல் கணக்கில் குவைத்தை வீழ்த்தி இந்திய கால்பந்து அணி ஒன்பதாவது SAFF பங்பந்து சாம்பியன்ஷிப்பை வென்றது. தொடர்ந்து FIFA உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் குவைத்தை 1-0 என்ற கணக்கில் சொந்த மண்ணில் வீழ்த்தியது. 22 ஆண்டுகளில் வெளிநாட்டில் நடந்த உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் நாட்டின் முதல் வெற்றியாகும்.
7. ஆசிய விளையாட்டு :
ஆசிய விளையாட்டில் இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி மற்றும் 41 வெண்கலப் பதக்கங்களுடன் புது வரலாறு படைத்தது. வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் மற்றும் ஸ்குவாஷ் போன்ற விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் தங்கம் வென்று அசத்தினர். இந்திய ஹாக்கி ஆண்கள் அணி உட்பட பல இந்திய விளையாட்டு வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளனர்.
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், இந்திய அணி 29 தங்கம், 31 வெள்ளி மற்றும் 51 வெண்கலம் என 111 பதக்கங்களை வென்றது. இது இரண்டு போட்டிகளிலும் நாட்டின் அதிகபட்ச பதக்க எண்ணிக்கையாகும்.
8. தமிழகத்தின் தங்கமகன் :
அஜர்பைஜானின் பாகுவில் நடந்த FIDE உலகக் கோப்பையில் இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா, இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனிடம் வெற்ரி வாய்ப்பை இழந்தார். டை-பிரேக்கில் 1.5-0.5 என்ற கணக்கில் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். செஸ் சாம்பியன் இந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றது உட்பட மிகப்பெரிய சாதனைகளை படைத்தார்.