மும்பையின் பல்வேறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழும் என்று மர்ம நபர் விடுத்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது தெரியவில்லை.
சமீபகாலமாகவே மும்பைக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாக இருக்கிறது. கடந்த மாதம் மும்பையைச் சேர்ந்த ரிலையன்ஸ் குழுமத்தின் அதிபர் முகேஷ் அம்பானிக்கு, 400 கோடி ரூபாய் வரை பணம் கேட்டு தொடர் கொலை மிரட்டல் இ மெயில் வந்தது.
அதேபோல, கடந்த 25-ம் தேதி ரிசர்வ் வங்கி அலுவலகம் உட்பட 11 இடங்களில் வெடிகுண்டு இருப்பதாக மும்பை போலீஸாருக்கு இ மெயில் வந்தது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இந்த மிரட்டலை கிலாபத் அமைப்பு அனுப்பியதாகக் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கடந்த 27-ம் தேதி ஜெய்ப்பூர் விமான நிலையத்தை வெடிக்கச் செய்யப் போவதாக விமான நிலைய அதிகாரிக்கு மிரட்டல் வந்தது. இப்படி அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் இ மெயில் மற்றும் போன் கால் வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மும்பை நகரில் பல்வேறு இடங்களில் தொடர் குண்டுகள் வெடிக்கும் என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டான்.
இதையடுத்து, போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பது தெரியவில்லை. அவன் யார், எங்கிருந்து பேசினான் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.
அதேசமயம், இன்னொருபுறம் வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து மும்பை நகர் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. முக்கிய இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், தீவிர வாகன சோதனையிலும் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாடப்படவிருக்கும் நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் மும்பையில் பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.